பத்மாபூரில் அந்தப் பிற்பகல் வேளையில், வானம் களேபரத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. அஸ்தமன இருளைப் போல கரும் மேகக் கூட்டங்கள் வானைச் சூழ்ந்திருக்க, அதில், ஒளிக்கீற்றாய் மின்னல்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தன. இடியோசை பூமியையே அதிரச் செய்ய, மழை மட்டும் பெய்தபாடில்லை. காலையில் தெளிந்திருந்த வானம், பகலில் இருந்த வெயிலின் உக்கிரத்தால் மாலைக்குள் இப்படி ஆகியிருந்தது.
வெளியே இருக்கும் சூழலை அமரகீர்த்தியின் மனமும் பிரதிபலித்தது. காலையில் தெளிவாய், குதூகலமாய் இருந்த மனம், பின்னர் நடந்த சம்பவங்களால், மிகவும் குழம்பிப் போயிருந்தது. அவன் உள்ளத்தில் மின்னலாய்க் கேள்விகள் தோன்றி, இடியாய் அவனைக் கலங்கடித்தன. “இளவரசி திவ்யாங்கனை விரும்புகிறாளோ?” “திவ்யாங்கனும் இளவரசியை நேசிக்கிறானா?” “தந்தையார் இளவரசியை எனக்கு மணமுடிக்க எண்ணுகிறாரா?” “என் மனதிலுள்ள எண்ணத்தை தெரியப்படுத்தினால் தந்தை அதற்கு ஒப்புக்கொள்வாரா?” “ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது?” இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள். கேள்வியின் சுழலில் சிக்கி அவனுக்கு மூச்சு முட்டியது.
“மகனே.. அமரகீர்த்தி”
அவன் திரும்பவில்லை. அவன் மனம் அங்கு இல்லையே.. விதுரசேனன் வந்து அவன் தோளைப் பற்றி உலுக்கியபின் தான் திரும்பினான்.
“மாலை மகாமந்திரியார் வருகிறார் அல்லவா.. அவரை சந்திக்க தயார்செய்துகொள்”
“இல்லை தந்தையே.. எனக்கு உடல்நிலை சௌகர்யமாய் இல்லை. அவரை நான் சந்திக்கவில்லை.. எனக்கு இலேசாக தலைவலிப்பது போல் உள்ளது.”
“சரி மகனே.. நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்.. நான் பார்த்துக் கொள்கிறேன்”
“இல்லை அப்பா.. நான் கொஞ்சம் வெளியே சென்று உலாத்திவிட்டு வரலாம் என நினைக்கிறேன்.”
“மழை நேரம் வெளியே செல்வது நல்லதல்ல மகனே..”
“நான் பார்த்துக் கொள்கிறேன் அப்பா”
உடன் வந்த மெய்காவல் வீரர்களையும் திருப்பி அனுப்பிவிட்டு, அந்தப் பரந்த நகரின் வீதிகளில் தனியே செல்லலானான். மனம் இருந்த குழப்பமான நிலையில், எங்கு செல்கிறோம் என்று தெரியாமல், கால்போன போக்கிலே நடந்தான். எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் எதுவும் தெரியாமல் நடந்துகொண்டிருந்தான்.
“இளவரசே” என்று ஒரு குரல் அவனை மீண்டும் இவ்வுலகத்துக்குக் கொண்டுவந்தது. அவன் கேட்கத் துடிக்கும் ஒரு குரல். திரும்பிப் பார்க்கும் முன்னரே, அழைத்தது திவ்யாங்கன்தான் என்று அவன் அறிவான். குரல் வந்த திக்கில் திரும்பிப் பார்த்தபோது, திவ்யாங்கன் ஓடாத குறையாக அவனை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டான்.
“என்ன இளவரசே.. தனியாக வந்துகொண்டிருக்கிறீர்கள்”
“நான் உங்கள் பிராயத்தினந்தானே.. என்னை நீங்கள் பெயர் சொல்லியே ஒருமையிலேயே அழைக்கலாம்.. இந்த சம்பிரதாய மரியாதை எல்லாம் தேவையில்லை”
“நீங்களும் என்னை அவ்வாறே அழைப்பதானால் எனக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை”
“நல்லது”
“உனக்குப் பிரச்சினையில்லை என்றால் நான் உன்னோடு துணையாக வரவா?”
“நீ எனக்குத் துணையாக வரவேண்டித் தானடா நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று மனதில் நினைத்துக்கொண்டு, “வந்தால் மகிழ்ச்சிதான்” என்றான்.
“எங்கள் பத்மாபூர் அழகாயிருக்கிறதா?”
“பத்மாபூரின் அழகுக்கென்ன? சொர்க்கலோகம்போல இருக்கிறது”
“ஆனால் அதன் அழகில் உன் மனம் ஈடுபடவில்லை போலிருக்கிறதே..”
“புரியவில்லை திவ்யாங்கா.. என்ன சொல்கிறாய்?”
“உன்னைப் பார்த்தால் ஏதோ தீவிரமான சிந்தனையில், கவலையில் இருப்பதுபோல் தெரிகிறதே?”
அமரகீர்த்திக்கு அதிர்ச்சி.. “கள்ளன்.. மனதைத் திறந்து படித்துப்பார்த்தவன் போல் சொல்கிறானே” என்று நினைத்தான்.
“சொல்ல விரும்பாவிட்டால் சொல்ல வேண்டாம்” என்றான் திவ்யாங்கன்.
“எல்லாம் காதல் குழப்பம்தான் திவ்யாங்கா..”
“காதல் குழப்பமா?”
“நான் ஒருவனைக் காதலிக்கிறேன்.. ஆனால் அவன் என்னை விரும்புகிறான என்று அறிந்துகொள்ள முடியவில்லை. இதற்கிடையே, வேறொரு பெண் வேறு அவனை விரும்புவது போல் தெரிகிறது. அவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வருகிறார்களோ என்று அச்சமாயிருக்கிறது..”
“உன் மனம் கவர்ந்த அந்தக் கள்வனிடம் நேரடியாகக் கேட்டுவிட வேண்டியது தானே”
“இல்லை திவ்யாங்கா.. எனக்கு அவ்வளவு துணிவு இல்லை.. ஒருவேளை நான் கேட்டு அவன் மறுத்துவிட்டால், என்னால் அதைத் தாங்கிக்கொள்ள இயலாது”
“அப்படியானால் கொஞ்சம் கஷ்டம்தான்” என்று திவ்யாங்கன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மழை தூற ஆரம்பித்தது.
“புதுமழையில் நனைவது உடலுக்கு நல்லதல்ல.. மழை விடும் வரை, அங்கு இருக்கலாம்” என்று ஒரு சிறிய கட்டிடத்தைக் காட்டினான் திவ்யாங்கன். இருவரும் அந்தக் கட்டிடத்தினுள் சென்றனர்.
அந்தக் கட்டிடத்தில் மிகவும் தீவிரமான காவல் போடப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் ஐந்தடிக்கு ஒரு வீரன் ஆயுதத்துடன் நின்றுகொண்டிருந்தான். சிறிய கட்டிடமானாலும், வலிமையான கருங்கற் சுவர்களால் கட்டப்பட்டிருந்தது.
“இது என்ன இடம்? இங்கு ஏன் இவ்வளவு காவல் போட்டிருக்கிறது?” என்று கேட்டான் அமரகீர்த்தி.
“இது பொக்கிஷக் கருவூலம். அதனால்தான் இவ்வளவு காவல்”
“என்ன? பொக்கிஷக் கருவூலமா? இவ்வளவு சிறிய கட்டிடத்திலா?”
“பொக்கிஷம் இந்தக் கட்டிடத்தில் இல்லை.. இதன் அடியில் இருக்கும் பாதாள அறைகளில் இருக்கிறது.”
“அவ்வளவு பெரிய பாதாள அறைகளா? என்னால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.”
“அவற்றைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டவன், அவனை அழைத்துக்கொண்டு, அருகிலிருந்த அறையில் நுழைந்தான்.
அந்த அறையில், நரைத்த மீசையும், தலைப்பாகையும் அணிந்த முதியவர் ஒருவர் அமர்ந்து ஏதோ குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று, “தனாதிகாரியாரே.. இவர் நம்முடைய அரச விருந்தினரான இளவரசர் அமரகீர்த்தி.. பொக்கிஷ நிலவறைகளைப் பார்க்க விரும்புகிறார். அதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்” என்றான்.
அவர் இருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மௌனமாக எழுந்து வேறொரு வாயில் வழியாக வெளியேறினார். திவ்யாங்கன் அமரகீர்த்தியை அழைத்துக்கொண்டு, அவர் பின்னே சென்றான். அவர் நேராக எதிரே இருந்த அறைக்குள் சென்று, இவர்கள் இருவரும் உள்ளே வரவும் கதவை உள்பக்கமாகத் தாளிட்டார். அந்த அறையில், கதவுக்கு மேலே இருந்த சிறிய பலகணியைத் தவிர வேறு சாளரமோ துவாரங்களோ ஏதுமில்லை. அறையின் ஒரு மூலையில் ஒரு தீவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. அது அந்த அறையையே கோரமாகக் காட்டியது.
தனாதிகாரி எதிரே இருந்த இரும்புக் கதவின் அருகில் சென்றார். அந்தக் கதவில், நாதாங்கியோ, சாவித் துவாரமோ இல்லை. ஒரு அழகிய கைப்பிடியுடனும் கதவு முழுவதும் அழகான பூவேலைப்பாட்டுடனும் இருந்தது. தனாதிகாரி தன் கழுத்தில் இருந்த வட்ட வடிவ பதக்கத்தைக் கழற்றினார். அந்தப் பதக்கதில் வித்தியாசமான, மிகவும் நுட்பமான ஒரு மலரின் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதக்கத்தை கதவின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்து அழுத்த, அது திறந்துகொண்டது.
அமரகீர்த்தி அந்தக் கதவின் நுட்பமான பொறியியலில் வியந்துபோனான். உறைந்துபோய் நின்றிருந்த அவனை இழுத்துக்கொண்டு அந்தக் கதவைத்தாண்டி உள்ளே சென்றான். தனாதிகாரி அருகிலிருந்த ஒரு கைவிளக்கை ஒளியூட்டி, திவ்யாங்கன் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்று கதவைப் பூட்டி விட்டார்.
“இதென்ன? நம்மை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விட்டாரே..” என்று கேட்டான் அமரகீர்த்தி.
“வருத்தப்படாதே.. என்னால் இதை உள்ளிருந்து திறக்க முடியும். வா… இப்போது பாதாள அறைக்குச் சென்று பார்க்கலாம்”
இருவரும், அங்கிருந்து கீழே சென்ற படிக்கட்டுகளில் இறங்கி பாதாள அறைக்குச் சென்றனர். அங்கு, தங்கக்கட்டிகள், நாணயங்கள், வெள்ளிக்காசுகள் என குவியல் குவியலாக அடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இளவரசனை அவை ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் நாட்டுக் கருவூலத்துடன் ஒப்பிட்டால், இங்குள்ள தங்கத்தின் அளவு தூசுக்குச் சமானம்.. அவனை வியக்கச் செய்தது, தரைக்கடியில் இவ்வளவு பெரிய அறையைக் கச்சிதமாகக் கட்டிய அவர்கள் கட்டிட வல்லமையே..
அவன் ஆச்சரியத்தில் நின்றிருக்க, “கீழுள்ள அடுத்த தளத்திற்குச் செல்லலாமா?” என்று கேட்டான் திவ்யாங்கன்.
“என்ன? இதற்குக் கீழ் இன்னொரு தளமும் இருக்கிறதா?”
“இருக்கின்றனவா என்று கேட்க வேண்டும் இளவரசர் அவர்களே..” என்று கிண்டலுடன் கூறினான் திவ்யாங்கன். பின் அவனை அழைத்துக்கொண்டு அதன் கீழிருந்த இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு அழகிய வேலைப்பாடுள்ள கலைப் பொருட்களும், இரத்தினங்களும் இருந்தன. அதைச் சுற்றிப் பார்த்த பின், இறுதியாக அதற்குக் கீழே இருந்த மூன்றாம் தளத்திற்குச் சென்றனர். அங்கு அவன் கண்டவை புத்தகங்கள்!
செப்பேடுகள், காகிதச் சுருள்கள், ஓலைச் சுவடிகள் எனப் பலவிதமான வடிவங்களில் அங்கு புத்தகங்கள் இருந்தன. அத்தனையும், வரிசையாக வகைவாரியாக அலமாரிகளில் அடுக்கப்பட்டு, குறியிடப்பட்டிருந்தன.
“இவைதான் நாங்கள் மிகவும் போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷங்கள்.. வரலாறு, இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு வகையான புத்தகங்களின் மூலப் பிரதிகள் இங்கு இருக்கின்றன. இவற்றில் இருந்து பிரதியெடுக்கப்பட்ட புத்தகங்களை நாடெங்கிலும் இருக்கும் நூலகங்களில் வைத்துள்ளோம்.” என்றான் திவ்யாங்கன்.
துர்காபுரியினரின் இந்தக் கொள்கை, புத்தகங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் பக்தி எல்லாம் அமரகீர்த்தியை மிகவும் வியக்கச் செய்தன. சிறிய நாடாக இருந்தாலும் அவர்கள் இவ்வளவு முன்னேறியிருப்பது இதனால்தான் என்று நினைத்துக்கொண்டான்.
சிறிது நேரம் அங்கிருந்த புத்தகங்களை பார்வையிட்ட பின் இருவரும் திரும்பலாம் என்று எண்ணினர். படிக்கட்டுகளில் ஏறி, ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, அங்கு நின்றுகொண்டிருந்தது, எட்டடி நீளத்தில், பளபளப்பாக, ஒரு பாம்பு!
(தொடரும்)