பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 12, 2013

காதலும் காதலிப்பவர்களும்

'காதல்' – இதைவிட என் பிராயத்திலுள்ள மக்களுக்கு அதிக உத்வேகத்தையும், அதிக குழப்பத்தையும் தரக்கூடிய ஒன்று எதுவுமில்லை. எல்லா வலிமைகளையும் தரக்கூடியதும் அதுவே; எல்லா நம்பிக்கைகளையும் தகர்க்கக்கூடியதும் அதுவே. சமீபமாக, என்னைச் சுற்றி காதலாலும், காதல் என்ற பெயராலும் நிகழ்ந்த சில சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்…
சம்பவம் – 1:
என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், என் வகுப்பிலிருந்த இன்னொரு பெண்ணை  காதலித்து வந்தான். ஒருதலைக்காதல்.. அவளுக்கு ஒருவாறாக அவன் காதல் தெரிந்திருந்தும், கடைசி வரை அவன் இவளிடம் தன் காதலை சொல்லவே இல்லை. அவ்வளவு ஏன், இருவரும் ஒருமுறை கூட பேசிக்கொண்டது இல்லை. இப்பொழுது படிப்பு முடிந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை போன பின்னும், அவன் இன்னும் அவளையும் தன் காதலையும் மறக்க முடியாமல் இருக்கிறான்..
கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவு, குறுந்தகவல் மூலம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவன் பணிபுரியும் இடத்திலும், தங்கியிருக்கும் இடத்திலும் பல கஷ்டங்கள் இருப்பதாகக் கூறினான்.. பிரதானமாகப் பணக்கஷ்டம். என்னால் இயன்ற தேற்றுதலைக் கூறி சமாதானம் செய்ய முயன்ற போது, அவன் சொன்ன வார்த்தைகள் : “ஏதாவது ஒரு கஷ்டம் வந்தா, அவள நினைச்சுக்குவேன் டா.. அவள நினைச்சுக்கிட்டா, எதையும் தாங்கிக்குற சக்தி வந்திடும்.. அவ நினைப்பு தான் என்னை வாழ வெச்சுட்டு இருக்குது”
- - -
சம்பவம் – 2:
இந்த சம்பவம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.. கடந்த மாத இறுதியில், ‘கே’ சமூகத்தில் நன்கு அறியப்பட்டிருந்த ஒரு காதல் ஜோடியில், ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அது ’கே’ தளங்களில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளியில், மற்றவரும் தன்னை மாய்த்துக்கொண்டார். மரிப்பதற்கு முந்திய நாள், அவர் பதிந்த இடுகையை வாசித்துவிட்டு, ஒரு துளி கண்ணீரேனும் சிந்தாதிருந்தவர், கண்டிப்பாக மனித ஜாதியை சேர்ந்தவராயிருக்க மாட்டார்.
- - -
சம்பவம் – 3:
கல்லூரிகளையும் காதல் கதைகளையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது. இந்த சம்பவம் எங்கள் கல்லூரியின் இன்னொரு காதல் ஜோடியின் கதை. ஒருவகையில், எங்கள் கல்லூரி வாழ்வின் ஆதிக் காதல் இவர்களுடையது தான். கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் முடியும் முன்னரே, இவர்கள் காதல் துளிர்விட ஆரம்பித்துவிட்டது. அந்த இளைஞன், என்னுடைய நெருங்கிய நண்பனாயிருந்த காரணத்தினால், அவர்கள் விவகாரம் முழுதும் எனக்கு கொஞ்சம் நன்றாகவே தெரியும்.
எல்லா காதல் கதைகளையும் போல, இந்தக் காதலிலும் பூதாகரமான பிரச்சினைகள் வந்தன. அந்த இளைஞனின், அதாவது என் நண்பனின் தந்தை, என்னை தனிமையில் சந்தித்து, எப்படியாவது தன் மகனை இதிலிருந்து மீட்க உதவச்சொல்லிக் கேட்டுக்கொண்டார். இவர்கள் சேட்டைகள் குறித்து நான் அவரிடம் சொல்லப்போக, நண்பனிடம் ‘துரோகி’ என்ற பட்டம், சகவாஷ தோஷத்தினால் கல்லூரிப் பேராசிரியரிடம் கெட்ட பெயர் எனப் பல அனுகூலங்கள் எனக்கும் பரிசாகக் கிடைத்தன.
கல்லூரியின் நான்கு வருடங்களில், இவர்கள்தான் மிகப் பிரபலமான காதல் ஜோடி. இந்தப் பெண்ணுக்காக, அந்த இளைஞன் அவன் வீட்டைப் பகைத்துக்கொண்டு, மதிப்பையும் பாசத்தையும் இழந்து பரிதாபமான நிலைக்கு வந்தான். அவளுக்காக அவன் இழந்ததும், அவளுக்கு இவன் செய்தவையும் கொஞ்சமல்ல. அவளால் கிட்டத்தட்ட தன் மொத்தத்தையும் இழந்தான்.
இவற்றுக்கிடையே, ஓரிரு நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது: “எனக்கு வீட்டில் திருமணம் செய்ய வரன் பார்த்துவிட்டார்கள். (வேறு ஒரு பையனைத்தான்!) வீட்டின் கட்டாயத்தால் என்னால் மறுக்க முடியவில்லை. ஜனவரியில் நிச்சயதார்த்தம் இருக்கும். தேதி நிச்சயமானதும் சொல்கிறேன்”
- - -
முதல் சம்பவத்தில் குறிப்பிட்ட அந்த நண்பனைப் பற்றி நினைக்கும்போது, வாழ்வில் ஒரு நம்பிக்கையும் காதலின் மீது ஒரு மரியாதையும் வந்தது. அவனைப் போன்ற ஒருவன் எனக்கு நண்பனாயிருப்பதே பெருமை என்று எண்ணுகிறேன். இரண்டாவது சம்பவத்தில், அவர்கள் எடுத்த முடிவு வருந்தத்தக்கதாய் இருந்தாலும், அவர்கள் காதலின் வலிமை என்னை சிலிர்க்க வைத்தது. ‘கே’ என்றால் வெறுமனே உடல் சுகத்திற்காய் அலைபவன் என்ற பிம்பத்தை சுக்கு நூறாக்கியவர்கள் அவர்கள்; அமரர்கள். மூன்றாவது சம்பவம்? என் வாயால் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

புதன், ஆகஸ்ட் 07, 2013

கருப்பு தினம்

Image

ஆகஸ்டு 6 – குரூரத்தின் உச்சத்தை மானுடம் கண்ட நாள். ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்ட நாள். அணு ஆயுத எதிர்ப்பின் சின்னமாக விளங்கும் நாள். ஆனால், அத்துடன் இந்த விஷயம் அடங்கி விட்டதா? ஜப்பான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

மேம்போக்காகக் கூறப்படும் காரணம் ஜப்பானைத் தோற்கடிக்க. ஆனால் வரலாறு அவ்வாறு கூறவில்லை. ஐரோப்பாவில் யுத்தம் எப்ரலிலேயே ஓய்ந்துவிட்டது. ஜப்பானும் ஏற்கனவே தோல்வியின் விளிம்புக்கே சென்றுவிட்டது. பிறகு எதற்காக இந்தப் பேரழிவு?

அமெரிக்காவுக்கு அவர்கள் ஆயுதத்தை, அது ஏற்படுத்தக் கூடிய அழிவின் எல்லையை பரிசோதித்துப் பார்க்க ஒரு களம் தேவைப்பட்டது. அதன் வலிமையை நிலைநாட்ட, எதிரிகளை அச்சுறுத்த ஒரு களம். அது ஜப்பான்.

ஏன் ஜப்பான்? ஏனெனில் அவர்கள்தான் நிராதரவாய், அவர்களுக்கு உபயோகமற்றவராய் இருந்தனர். நலிந்தவனைத் தாக்கி தன் பலத்தை காட்ட நினைத்த ‘வீரச்செயலே’ அது.
நலிந்தவனை வலியோன் அழிப்பது, பணமும் பலமும் படைத்தவன் அது இல்லாதவனை நசுக்குவது, எண்ணிக்கையில் அதிகம் இருப்பவன் குறைந்தவனை விரட்டுவது எல்லாம் காலம் காலமாக நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.

சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல், அவ்வளவு ஏன், நிம்மதியாக சாகக்கூட முடியாமல் வாழும் ஈழ மக்களாகட்டும், சொந்த வீட்டிலேயே வாழ முடியாமல் அகதியாக்கப்படும் மாற்றுப் பாலினத்தவராகட்டும், எங்கேயும் நலிந்தோர் நசுக்கவே படுகின்றனர். ஒரு சாரார், நம்மிடம் ஒற்றுமை எனும் வலிமை இல்லாததால் அழிக்கப்படுகின்றனர் என்றால், மற்றவர், தங்களின் மனவலிமை குன்றுவதால் அழிகின்றனர்.

இந்த நாளை வெறுமனே ஒரு போர்ச்சுவடாகப் பார்க்காமல், நலிந்தோரை அரவணைக்க அறிவுறுத்தும், ஒற்றுமையைப் பேண வழிவகுக்கும் ஒரு நாளாகப் பார்ப்போம். அகத்தாலும், புறத்தாலும் நம் வலிமையைப் பெருக்கிக் கொள்ள ஒரு நாளாகப் பார்ப்போம்.

[ படத்தில்: ஹிரோஷிமா அமைதிப் பூங்காவின் மத்தியில் இருக்கும் கட்டிடம். இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே அந்த அணு ஆயுதத் தாக்குதலில் இடியாமல் நின்றது. அந்தப் பேரழிவின் சின்னமாக அந்நிலையிலேயே பராமரிக்கப்படுகிறது ]
Web Analytics