திங்கள், ஆகஸ்ட் 12, 2013

யுத்தம் - பாகம் 1

‘துர்காபுரி’ என்றால் “ஊடுறுவ முடியாத அரணை உடைய தேசம்” என்று பொருள். அந்தப் பெயருக்கு மிகவே பொருத்தமாய், மிக்க பாதுகாப்பான புவியியல் அம்சங்களுடன் இருந்தது அந்த நாடு. மறையில் கூறப்பட்டுள்ள அரணின் அம்சங்கள் யாவும் அமையப் பெற்று, மூன்று புறம் மலையாலும், ஒருபுறம் கடலாலும் சூழப்பட்டிருந்தது. அந்த நாட்டினுள் செல்லும் ஒரே பாதை, “மேலவாயில்” என்று அழைக்கப்பட்ட, இரண்டு மலைகளின் ஊடேயிருந்த ஒரு கணவாய். அங்குதான் நாம் இப்பொழுது நின்றுகொண்டு இருக்கிறோம்.

பத்து தேர்கள் இணையாகப் பயணம் செய்யும் அளவுக்கு அகலம் கொண்ட இருவழிப் பாதை, அறுங்கோண வடிவ கற்கள் பதிக்கப்பட்டு, வெளிப்புறம் நோக்கி இலேசான சரிவுடன், அமைதியான நீர்ப்பரப்பைத் தோற்கடிக்கும் சமதளமாய் இருந்தது. அந்த இராஜபாட்டைக்கு கிரீடம் வைத்தாற்போல, அம்பாரியுடம் அதன்மேல் கொடியும் தாங்கிய யானைகள் கடக்கும் அளவுக்கு உயரமாய், அழகிய வேலைப்பாடுகளுடன் நின்றது அந்தத் தோரண வாயில். தோரண வாயிலின் முன்பு, வீரர்களுடன் நூறு குதிரைகளும், ஆயிரம் காலாள் வீரர்களும் கொண்ட ஒரு சிறுபடை நின்றுகொண்டிருந்தது.

அந்தப் படையின் முன்புறம் அவற்றினை தலைமை தாங்கி, மூன்று புரவிகள் நின்றன. நடுவே நின்ற வெண்புரவியின் மீது, அகன்ற மார்பின் மீது நீலக்கற்கள் கொண்ட ஒரு ஆரமும், வலிமையான புஜங்களின் மீது, பொன்னாலான ஒரு காப்பையும் அணிந்த கம்பீராமான ஒரு மத்திம வயது ஆள் இருந்தார். அவருக்கு வலப்புறத்தில் மற்றொரு வெண்புரவியில், தேவாதி தேவர்களும் பார்த்து பொறமை கொள்ளும்படியான அழகுடனும், அமைதியும் தீர்க்கமும் ஒருங்கே அமைந்த வட்ட முகத்துடனும் கூடிய ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவனும் புஜங்களில் பொன் காப்பும், கழுத்தில் மரகதக் கற்களாலான ஒரு மாலையும் அணிந்திருந்தான். இடது ஓரத்தில் இருந்த, வெள்ளிக்காப்பும், முத்துமாலையும் அணிந்திருந்த இளைஞனை நோக்கி, “தூதுவரே.. இவர்கள் போர் வீரர்கள் அல்லவே.. எங்கள் மெய்க்காவல் படையினர்தானே.. இவர்களையும் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்வது எதற்காக?” என்று கேட்டான்.

மத்தியில் இருக்கும் அந்த நபர், “மகனே.. பதற்றப்படாதே. இது இவர்களின் சம்பிரதாயம். நாம் இதை மீறலாகாது. தூதுவரே.. நீங்கள் வாயில்பிரதானியிடம் சென்று ஆயுதங்களை வரன்முறைப்படுத்தி ஒப்படைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.

“நன்றி வேந்தே!” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த வாயிற்கோட்டையை நோக்கிச் சென்றார் அந்தத் தூதுவர். அவர் கண்ணிலிருந்து மறைந்ததும், “தந்தையே, எல்லா ஆயுதங்களையும் ஒப்படைப்பது சரியா? இதற்குப் பின் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ?” என்றான் அந்த இளைஞன்.

“இல்லை மகனே.. இந்தத் தோரணவாயிலை ஆயுதத்துடன் கடக்கலாகாது. இது புனிதமானது. மீறிக் கடப்பவர்கள், மாய்ந்துபோவார்கள் என்பது ஐதீகம்”

“இது மூடநம்பிக்கையாகத் தெரிகிறது அப்பா” “மூடநம்பிக்கையா இல்லை உண்மையா என்பதை நீயே விரைவில் அறிந்து கொள்வாய். அதுவும் போக, நம் வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை தோரண வாயில் தாண்டியதும் தருவிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்”

இதற்குள் தூதுவர் திரும்பிவிட, அவர்கள் அமைதியாகினர். தூதுவன், “அரசே, ஆயுதங்களை ஒப்படைக்க ஏற்பாடு செய்தாயிற்று” என்றார். அரசரும், இளவரசரும் முன்னே செல்ல, அந்த மெய்க்காவலர் படை வீரர்கள் அவர்களைத் தொடர்ந்து வாயிற்கோட்டை நோக்கிச் சென்றனர். வாயிற்கோட்டையில், அரசர் உட்பட அனைவரின் ஆயுதங்களும் வகையும் எண்ணமும் குறிக்கப்பட்டு ஒரு அறையில் வைத்து இரண்டு பூட்டுகள் கொண்டு பூட்டப்பட்டது. வாயிற்பிரதானி ஒரு சாவியை அரசரிடம் ஒப்படைத்துவிட்டு, மற்றொரு சாவியை தன்வசம் வைத்துக்கொண்டார்.

வெளியேறிய பின், இளவரசன் தன் தந்தையைப் பார்த்து, “இந்த வாயில்பிரதானி, அண்டை நாட்டின் அரசன் என்று கூட பாராமல் உங்கள் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துவிட்டாரே? துர்காபுரியின் முதன்மை மந்திரி உங்கள் ஆயுத்தையாவது விட்டுவைக்க உத்தரவிட்டு இருக்கலாம்” என்றான்.

“அவர் எங்கே பறிமுதல் செய்தார்? நானாகத் தானே ஒப்படைத்தேன்.. இந்த விதியில் யாருக்கும் விலக்கில்லை. அதுபோக வாயிற்பிரதானிக்கு உத்தரவிடும் உரிமை இந்நாட்டு மன்னருக்கே கிடையாது. அவரின் அனுமதி இல்லாமல் மன்னரே ஆயினும் எதையும் இந்த வாயிலைத் தாண்டி கொண்டுசெல்ல முடியாது.”

“என்னவோ.. எல்லாம் விசித்திரமாயிருக்கிறது” “பொறு மகனே.. இது இப்போது தான் துவங்கி இருக்கிறது”

இன்னும் துர்காபுரி இந்த இளவரசனுக்கும் நமக்குமாய் ஒளித்துவைத்திருக்கும் விசித்திரங்களைக் காண நாமும் அவர்களுடன் அந்த வாயிலைக் கடந்து பின் தொடர்வோம்.. நீங்களும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பின்னே வாருங்கள். நான் முன்னே அவர்களுடன் செல்கிறேன்…
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Web Analytics