புதன், ஆகஸ்ட் 14, 2013

யுத்தம் - பாகம் 3

சூரியன் ஸ்ரீதுவாரிடம் பிரிவுபச்சாரம் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், விதுரசேனனும், அமரகீர்த்தியும் ஒரு சிறிய பரிவாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அரச அடையாளங்கள் எதுவும் இல்லாமல், முக்கிய மெய்க்காவல் வீரர்கள் மட்டும் பின்தொடர, அந்த செல்வநகரின் ஆடம்பரமான வீதிகளின் அழகையும் பிரம்மாண்டத்தையும் இரசித்தவாறே சென்றனர்.

அவர்கள் சென்ற வீதி, அதைவிட அகலமான ஒரு இராஜவீதியில் சென்று முடிந்தது. அந்தத் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி நிமிர்ந்து பார்த்த அமரகீர்த்தி, தான் கண்ட காட்சியால் ஒரு நிமிடம் உறைந்து நின்றுவிட்டான்.

அவன் முன்னே, ஒரு நூறடி தூரத்தில், அவன் இதுநாள் வரை கதைகளில் மட்டுமே கேட்டறிந்த யாழிக் கோயில் இருந்தது. செவிவழிக் கதைகளாக இதுவரை இக்கோயிலைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறான். அவற்றை எல்லாம் கட்டுக்கதை என்று நம்பிவந்தான். ஆனால், கதைகளில் கேட்டதைவிட இந்தக் கோயில் பன்மடங்கு அழகாக இருந்தது.

அதை நேரில் பார்க்க இயலாத வாசகர்களுக்காக, அதைப்பற்றி நான் கூறுகிறேன். அது ஒரு வட்ட வடிவமான கோயில். வட்டத்தின் விளிம்பில், சீரான இடைவெளியில், பன்னிரண்டு தூண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் பன்னிரண்டு அடி உயரமுள்ள தங்கத் தூண்கள். அந்தத் தூண்கள் முழுவதும், மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளாலும், விலையுயர்ந்த இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கலையம்சம் பொருந்திய மொட்டைத் தூண்கள். ஆம். அந்தக் கோயிலுக்குக் கூரை இல்லை.

அந்த வட்டவடிவ தரை முழுதும் பொன்னாலும் மணிகளாலும் வேயப்பட்டிருந்தது. ஒரு அரைவட்டப் பகுதி சமதளமாய், வழிபடுப்வர்கள் நிற்பதற்கேற்ப அமைந்திருந்தது. மற்றோரு பகுதி, பன்னிரு படிகள் கொண்ட உயர்த்தப்பட்ட மேடையாக இருந்தது. சிறிதும் பெரிதுமான நூற்றுக்கணக்கான சுடர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மண்ணில் இறங்கி வந்த தேவலோகம் போல காட்சியளித்தது.

“அப்பா.. நான் காண்பது உண்மைதானா? இது யாழிக்கோயிலா? அப்படியானால்..” என்று அமரகீர்த்தி கேட்டுக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த விதுரசேனன், “அடடா.. பூஜை நேரமாகிவிட்டது போல இருக்கிறதே.. வேகமாக நட.. போகலாம்” என்று சொல்லிக்கொண்டே ஓடாத குறையாக நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர வேண்டி இளவரசனும் விரைந்து செல்ல வேண்டியிருந்தது.

இருவரும் அந்தத் தங்கத் தூண்களைத் தாண்டி கோவிலின் உள்ளே நுழைந்தனர். கோயிலினுள் மிகக் குறைந்த கூட்டமே இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை, இது ஆயிரம் வருடங்களாக நடைபெறும் வழக்கமான ஒரு சடங்கு. ஆனால் இளவரசன் இவற்றை எல்லாம் அதிசயமாகப் பார்த்தான். அவன் இதுவரை கட்டுக்கதை என்று நம்பிவந்தது இப்போது அவன் கண்முன்னே நிஜமாகிக் கொண்டிருக்கிறது.

சூரியன் மெல்ல தொடுவானத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. பீடத்தில் நின்றிருந்த தலைமை அறங்காவலர், மேற்கு திசையை நோக்கி, எதையோ எதிர்நோக்கிக் காத்திருப்பவர் போல இருந்தது. எனவே இளவரசனும் அந்த திசையை நோக்கலானான். அங்கே, ஒரு வளர்ந்த யானையை விடப் பெரிய உடலையும், அதற்கேற்ற சிறகுகளும் உடையதாய், வானை ஆக்கிரமித்தபடி பறந்துவந்தது அந்தப் பறவை. அந்தக் கோயிலை நோக்கிவந்து, அந்த பீடத்தில் நின்றது. பதினாறு அடி மதிக்கத்தக்க உயரமும், சிங்கம் போன்ற உடலமைப்பும், முதுகில் மிகப்பெரிய சிறகுகளும் கொண்ட, ஒரு யாழி!

அதை வரவேற்பவரைப்போல, அந்தத் தலைமை அறங்காவலர் சிரம் தாழ்த்த, அந்த யாழியும் பதிலுக்கும் சிரம் தாழ்த்தியது. பிறகு, தலைமை அறங்காவலர், கட்டியம் கூறுபவர் போல பெரிய குரலெடுத்து, “துர்காபுரி தேசத்தின் அறத்தையும் தர்மத்தையும் கண்காணிக்கும் நான், இந்நாட்டு மக்கள் யாவரும் அமைதியும் வளமும் பெற்று வாழ எல்லா பிரயத்தனமும் செய்யப்படுவதாயும், இவ்விடம் வாழ இயலாதாகி எல்லைவிட்டு வெளியேறிய ஜீவன் ஏதுமில்லை என்றும் உறுதியளிக்கிறேன். மகா சரபேஸ்வரமூர்த்தியின் ஆணைப்படி, இத்தேச எல்லையை அத்துமீறிக் கடந்தவன் எவனோ, அவன் உடலை உடனே ஒப்படைக்கவேண்டி, யாழிகளின் பிரதிநிதியாக வந்திருக்கும் உங்களிடம் கோருகிறேன்.” என்று, காலம் காலமாக உச்சரிக்கப்படும் அந்த வாக்கியங்களைக் கூறினார்.

சில கணங்கள் அமைதிக்குப்பின், ஒரு அழகிய மலர்மாலையை அந்த யாழிக்கு சூட்டி, “மகா சரபேஸ்வர மூர்த்தியின் திருவருளால், துர்காபுரியின் அமைதி மீண்டும் காக்கப்பட்டது. நன்றி” என்று கூறவும், அந்த யாழி ஒரு பெருந்தாவலில் வானை மீண்டும் ஆக்கிரமித்து, அந்தக் கோயிலை ஒருமுறை வட்டமிட்டு, பின் தான் வந்த திசையிலேயே சென்றது.

அமரகீர்த்தி அந்த யாழி சென்ற திசையை மெய்மறந்து நோக்கிக் கொண்டிருந்தான். அவன் முகம் அப்போதுதான் எதிர்பாராமல் அறையப்பட்டவன் போல அதிர்ச்சியுடன் இருந்தது. “என்ன மகனே.. உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?” என்ற விதுரசேனனின் குரல்தான் அவனை இந்த உலகத்துக்கு இழுத்துவந்தது. “இல்லை அப்பா.. இந்த.. ” என்று எதோ சொல்லவந்த அமரகீர்த்தியை, கையமர்த்தி, “எதுவாகினும், நம் உறைவிடம் சென்று பேசலாம்.. இப்போது அமைதியாக இரு” என்று கூறினார். இருவரும் அவர்கள் தங்கியிருந்த அரசினர் மாளிகைக்கு சென்றனர்.

ஓய்வறையில் நுழைந்தும் “தந்தையே.. நான் கண்டது உண்மைதானா? உண்மையிலேயே ஒரு யாழி இருக்கிறதா?” என்று கேட்டான்.

“ஒரு யாழி இல்லை.. துர்காபுரியின் மேற்கே உள்ள வனத்தில் நூற்றுக்கணக்கான யாழிகள் இருப்பதாகக் கூறுவர்” என்றார் விதுரசேனன்.

“நாம் அந்தக் காட்டைக் கடந்து தானே வந்தோம்? அங்கு இவ்வளவி பெரிய பட்சிகள் இருப்பதற்கான அறிகுறியேதும் காணப்படவில்லையே?”

“இவை தெய்வீக சக்தி கொண்ட உயிரினங்கள்.. துர்காபுரி மக்களே இந்த பூஜை தவிர்த்து மற்ற சமயங்களில் இவற்றைப் பார்த்த்தில்லை. இவை அஷ்டமா சித்திகளும் அமையப்பெற்றவை. அவற்றால் கண்ணில் படாமல் மறையவோ, உருமாறவோ முடியும். மின்னல் வேகத்தில் பறக்க முடியும். கண்ணால் பார்த்தே மனிதர்களைக் கொல்ல முடியும்.. அவற்றின் ஆற்றல் அளப்பரியது”

“இவை ஏன் துர்காபுரியைக் காவல் காக்கின்றன? நிஜமாகவே சரபேஸ்வரர் அளித்த வரத்தால்தானா?”

“அப்படித்தான் தெரிகிறது. தெளிவான காரணத்தைக் கூற துர்காபுரி மக்களால் கூட முடியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் முந்தைய நிகழ்வல்லவா?”

“அப்படி என்னதான் வரம் கொடுத்தாராம்?”

“இன்னாட்டுப் பிரஜை ஒருவன் வாழ வழியின்றி வெளியாறதபடி இவர்கள் பார்த்துக்கொள்ளும்வரை, அந்நியன் எவனும் அத்துமீறி நுழையாமல் யாழிகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவே. இப்போது சொல் மகனே, நம்மிடம் இருக்கும் இருபத்தி நான்கு இலட்சம் வீரர்களும் இந்த யாழிகளுக்கு ஈடாகுமா?”

“ஆனால் இவ்வளவு பிரயத்தனம் செய்து இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் என்ன தந்தையே?”

“இந்நாட்டின் அமைவிடம் மிக சிறப்பானது. மிகப் பாதுகாப்பான புவியியல் அம்சங்களுடம், கடல்வாணிக வழித்தடத்தில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. ஆனால் இன்னாட்டு மக்கள் நாட்டின் எல்லையைத் தாண்டுவது பாவம் என்று கருதுவதால், துறைமுகம், கப்பல் போக்குவரத்து என எதற்கும் அனுமதிக்கவில்லை. இந்த நாடு மட்டும் நம்வசம் வந்தால், நம் நாட்டின் வளமும் பாதுகாப்பும் பன்மடங்கு உயரும்”

“என்னவோ அப்பா.. எனக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது”

“ஒரு குழப்பமும் வேண்டாம் மகனே.. நீ சென்று உணவருந்திவிட்டு நிம்மதியாகத் தூங்கு. நாளை மீண்டும் பிரயாணத்தைத் துவங்க வேண்டுமல்லவா?”

மறுநாள் துர்காபுரியின் தலைநகருக்கு பயணப்பட வேண்டிய ஆயத்தங்களைச் செய்ய, இளவரசன் வெளியேறினான். அந்தப் பயணம் துவங்கும்வரை நாமும் சிறிது காத்திருப்போம்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Web Analytics