திங்கள், ஆகஸ்ட் 12, 2013

துன்பச்சுற்றுலா - பாகம் 1

1

மஞ்சள் வெயில் வீசும் மாலை வேளையில், பசுமையான மரங்களால் சூழப்பட்ட அந்த பிரம்மாண்ட கட்டிடம் “கிளிநொச்சி விண்கல நிலையம்” என்ற நியான் பெயர்ப்பலகையைத் தாங்கி நின்றது. காத்திருப்போர் அறையின் பாலிமர் நாற்காலியில் கண்கள் நிறைய தேடலுடன் உள்ளே வரும் அனைவரையும் உற்று நோக்கிக்கொண்டு இருக்கும் இந்த யுவனின் பெயர் “விஜய்”. அந்த அறை முழுவதும் பயணிகளால் நிரம்பியிருக்கிறது. அவன் கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம் போன்ற வஸ்துவை ஓரக் கண்ணால் பார்த்தான். ஏவலுக்குக் காத்திருக்கும் காவலாளி போல உடனே அது ஒரு பீப் ஒலியை வெளியிட்டு பின் “நேரம் மாலை 5 மணி 42 நிமிடம். தேதி ஜூன் 13, 1992” என இயந்திரக் குரலில் கூறியது. வெறுப்புடன் வாசலை நோக்கியவன் முகம், உள்ளே நுழைந்த ஒரு இளைஞனின் முகத்தைப் பார்த்ததும் சட்டென பிரகாசமாகியது. ஆனால், மலர்ச்சியை மறைத்துக்கொண்டு பொய்யான கோவத்தை ஒட்டிக்கொண்டான். அந்த இளைஞன் நேராக இவனை நோக்கி வர, விஜய் அவனிடம் “எப்பயாவது சொன்ன நேரத்துக்கு வரியா? சோம்பேறி!” என்று கூறி செல்லமாக தலையில் ஒரு குட்டு வைத்தான். வந்தவனும் “சாரி டா.. அதான் ஷட்டில் (Shuttle : விண்கலம்) புறப்படும் முன்னே வந்துட்டேன் இல்ல” என்று சிணுங்கினான். இந்த புதுமுகத்தை இப்போது அறிமுகம் செய்யலாம்.. இவன் பெயர் விக்னேஷ். செல்லமாக விக்கி. கொஞ்சம் பழைய பெயராகத் தோன்றினால் மன்னியுங்கள்.. விஜயும் விக்கியும் “மிதக்கும் சொர்க்கம்” எனும் விண்வெளி கேளிக்கைப் பூங்காவிற்கு சுற்றுலா செல்ல வந்திருக்கின்றனர். இரண்டு ‘அழகான’ இளைஞர்களை அறிமுகப்படுத்தியவுடன் ஏதேனும் காதல் கிசுகிசுவைப் பரப்பி விட வேண்டாம். அவர்கள் நண்பர்களாகத்தான் வந்திருக்கின்றனர். கொஞ்சம் பொறுங்கள்.. ஏதோ அறிவிப்பு வருகிறது. என்னவெறு கேட்போம்..

“ஒன்றுபட்ட தமிழ்த்தேசத்தின் கிளிநொச்சி விண்கல ஏவுதளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. மிதக்கும் சொர்க்கம் விண்வெளி கேளிக்கைப் பூங்காவிற்கு செல்லும் பயணிகள் நுழைவாயில் 12 வழியாக பாதுகாப்பு சோதனைக்குச் செல்லவும். நன்றி”.

இதோ, நம் நாயகர்கள் நுழைவாயிலை நோக்கிச் செல்கிறார்கள். நாமும் அவர்களைத் தொடர்ந்து செல்வோம். வாருங்கள்…

2

காற்றைக் கிழித்து சீறிச் சென்ற விண்கலத்தை விட அதிக வேகமாய் அலைபாய்ந்துகொண்டு இருந்தது விஜயின் மனம். விண்வெளிப் பயணத்திற்காய் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைத்துக்கொண்டு இருக்கும் அவன், தன் மனதையும் ஒரு கூண்டுக்குள் அடைத்து வெளிப்படுத்தாமல் வைத்து இருந்தான். பொங்கும் நீரூற்றாய் காதல் பெருகும்போது சிறைப்படுத்தும் கூண்டுகள் கொள்ளுமா? இந்தச் சுற்றுலா முடியும் முன்னர் தன் மனதை விக்கியிடம் வெளிப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தான்.

அவன் மனம் திட்டமிட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில், “உங்கள் பிரயாணம் இனிதே முடிந்தது. “மிதக்கும் சொர்க்கம்” உங்களை வரவேற்கிறது. நல்வரவு” என ஒலித்தது. விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையவும், பாதுகாப்புக்கான கண்ணாடிக் கூண்டுகள் திறந்தன. நம் நாயகன் மனதைச் சிறைப்படுத்திய கண்ணாடிக் கூண்டும் விலகும் என நம்புவோம். அதுவரை மௌனமாக அவர்களைப் பின்தொடர்வதைத் தவிர வேறு வழி இல்லை இதோ, அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைகின்றனர். நாமும் செல்வோம்..

விஜயும், விக்கியும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர். பிரம்மாண்டமான, அழகாக வடிவமைக்கப்பட்ட அறை. இருவரும் உடுப்புகளை மாற்றிக்கொண்டு படுக்கைக்குச் சென்றனர். பிரயாணம் அவர்களை மிகவும் களைப்படையச் செய்திருக்கவேண்டும். விஜய் படுத்தவுடன் உறங்கிப்போனான். ஆனால் விக்னேஷ் தூங்கவில்லை. அவன் மனதிலும் ஒரு புயல் வீசிக்கொண்டு இருக்கிறது. சிறிது நேரம் விஜயின் முகத்தை உற்றுப்பார்த்தவன், அவன் தூங்கிவிட்டான் என உறுதிசெய்துகொண்டான். விஜயின் கலைந்த சிகையைக் கோதிவிட்டு, “நீ என்னைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும் டா.. நீயா சொல்லனும் என்று இத்தனை நாள் எதிர்பார்த்தேன். என்னை ஏன் இப்படி காக்க வைக்கிற? இந்த டூர் முடிஞ்சு நாம திரும்பப் போறதுக்குள்ள நீ சொல்லலனா நான் உன்னைவிட்டு ஒரேடியா விலகிடுவேன்” என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டான். சிறிது நேரத்தில் அவனும் தூங்கிவிட்டான்.

அவர்கள் இருவர் மனதிலும் வீசிய புயலைவிட பெரிய புயல் ஒன்று வெளியில் வீசப்போவது தெரியாமல், இருவரும் நாளைய நாளின் கொண்டாடங்களைத் தூக்கத்திலும் கனவாய்க் கண்டனர். மன்னித்துவிடுங்கள் நாயகர்களே.. உங்கள் கொண்டாட்டங்கள் கனவாகவே முடியப் போகின்றன..

3

“விக்கி! எழுந்திரு.. நேரம் ஆச்சு” என்று உசுப்பினான் விஜய். “அதுக்குள்ள விடுஞ்சுடுச்சா டா?” என்று சிணுங்கினான் விக்னேஷ். “டேய் இது உன் வீட்டு பெட்ரூம் இல்லை டா.. இங்க பகலும் கிடையாது, இரவும் கிடையாது. இப்படி தூங்கவா 36000 கிலோமீட்டர் பிரயாணம் பண்ணி வந்த? எந்திரிச்சு கிளம்பு” என்று கிண்டல் செய்துகொண்டே குளியலறைக்குள் சென்றான்.

இருவரும் களைப்பு நீங்கி தங்களை சுத்தம் செய்துகொண்டு உணவு விடுதிக்கு வந்தனர். அவர்களை நோக்கி வந்த இயந்திர மேசைப்பணியாள் ( Robowaitress) உணவு வகைகளைப் பட்டியலிட்டது.  அவர்கள் உணவைத் தேர்வு செய்து கூறவும் சமையல் கூடத்திற்குச் சென்று எடுத்துவந்தது. இருவரும் நிதானமாக உணவை உண்டு முடித்தனர். இறுதியாக குளிர்பானம் கொண்டுவரக் கட்டளையிட்டனர்.  ஆளுக்கொரு புட்டி தான்.. ஒரே புட்டியில் இரண்டு குழல் போட்டு குடிக்கும் பழக்கம் 22 ஆம் நூற்றாண்டில் வழக்கொழிந்து போயிருந்தது.

அந்த இயந்திரப் பணியாள் குளிர்பான புட்டிகளை ஒரு தட்டில் வைத்து ஏந்தி அவர்களை நோக்கி வந்தது. அப்போது திடீரென அங்கிருந்த எல்லா விளக்குகளும் அணைந்தன. மின்சாதனங்கள் இயங்காமல் நின்றன. குளிர்பானத்தைக் கொண்டுவந்த இயந்திரன் அவர்கள் மேசையில் மோதி தட்டைத் தவறவிட்டது. சுமார் ஒரு நிமிட குழப்பத்திற்குப் பிறகு மீண்டும் மின்சக்தி சீரடைந்தது. அனைத்தும் எப்போதும் போல் இயங்க ஆரம்பித்தன.

“இங்க ஏதோ தப்பா இருக்கு” என்றான் விஜய்.

“ஏன் அப்படி நினைக்கற? எலக்ட்ரிக் சிஸ்டம்ல ஏதும் ஃபால்ட் வந்திருக்கும். அதான் பவர் போய்ட்டு வந்திருக்கு. இது சாதாரண விஷயம் தான?” என்று கேட்டான் விக்னேஷ்.

“பவர் ஃபால்ட்னா இந்த ரோபோ ஏன் தவறா இயங்கனும்? அது பேட்டரியில் தான் இயங்குது. அதுக்கு கண்களும் கிடையாது. ப்ராக்சிமிட்டி சென்சார் (Proximity sensor: அருகாமை உணர்வி) மட்டும்தான் உண்டு. அது ஏன் வந்து மோதனும்?” என்று கூறினான் விஜய்

“நீ என்ன டா சொல்ல வர்ர? எனக்கு ஒன்னும் புரியல” – இது விக்னேஷ்.

“நீ என்ன நினைக்கற மித்ரா?” என்று தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரம் போன்ற வஸ்துவிடம் கேட்டான் விஜய். அது சிறிது மௌனத்திற்குப் பிறகு, தன் ஹோலோகிராம் திரையில் ஒரு ஆச்சரியக்குறியையும், பின் ஒரு கேள்விக்குறியையும், சில பீப் ஒலிகளையும் ஏற்படுத்தியது. இந்த மித்ரா ஒரு மின்னணுக் காரியதரிசி. விஜயின் சொந்தத் தயாரிப்பு.

விக்னேஷ் பொறுமை இழ்ந்தவனாய் “இங்க என்ன நடக்குது? தெளிவா சொல்லு டா? என்றான். அதற்கு விஜய் கூறிய பதில்:

“இந்த ஒட்டுமொத்த விண்வெளி நிலையமும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் (Artificial intelligence-AI) மூலமா தான் இயங்குது. அதை இயக்குற கம்ப்யூட்டர் கோர் இந்த விண்வெளி நிலையத்தின் மையப் பகுதியில இருக்கு. அதை நெருங்குறது கூட அவ்வளவு சுலபம் இல்ல. அதைச் சுற்றி நிறைய பாதுகாப்பு சாதனங்களும், அத்துமீறி நுழைபவர்களை பிடிக்கும் பொறிகளும் இருக்கு. அதன் மையப் பகுதியில கணிணியில் கோளாறு ஏற்பட்டா சரிசெய்யவும், அவசர உபயோகத்துக்கும் மேனுவல் ஓவர்ரைட் பேனல் (Manual Override Panel) இருக்கு”

“இப்ப என்ன சொல்ல வர்ர? புரியும்படி சொல்லு டா”

“ஏ.ஐ (AI) ஒழுங்கா இயங்கிட்டு இருக்கும்போது அந்த அறைக்குள்ள யாரும் நுழைய முடியாது. அதனால அதை யாரோ ஹேக் (Hack) பண்ணி நிறுத்தியிருக்காங்க. அதுக்கப்புறம் அந்த கட்டுப்பாட்டு அறைக்குள்ள நுழைஞ்சு மீண்டும் மேனுவலா ஆன் பண்ணி இருக்காங்க.”


“உனக்கு எப்படி இந்த விஷயம் எல்லாம் தெரியும்?”

“நான் ஒரு ஏ.ஐ. டிசைன் என்ஜினியர் டா.. இத தெரிஞ்சுக்க வேண்டியது என் தொழில்”

“நீ ஓவரா கற்பனை பண்ற. அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. நிஜமாவே சிஸ்டம்ல எதும் ஃபால்ட் இருக்கும். அதான் இப்படி நடந்து இருக்கு”

“கொஞ்ச நேரத்தில தெரிஞ்சுடும்”

இருவரும் தங்கள் அறையை நோக்கி சென்றனர். அப்போது திடீர் என எச்சரிக்கை சங்கு (siren) ஒலித்தது. சிவப்பு நிற ஒளிவிளக்குகள் நடைபாதையைக் கலவரமாக்கின. ஒலிப்பெருக்கியில் இருந்து “அபாயம்! பயணிகள் அனைவரும் உடனே மாநாட்டு அறைக்கு (Conference hall) செல்லவும்” என்ற அறிவிப்பு தொடர்ச்சியாக ஒலித்தது.

“பார்த்தயா டா.. நிஜமாவே ஏதோ பிரச்சனை. வா, உடனே கான்ஃபரன்ஸ் ரூமுக்கு போகனும்” என்றான் விக்னேஷ்.

“ஆபத்துனா எமர்ஜென்ஸி ரூமுக்கோ ஷட்டிலுக்கோ போவாங்களா? இல்ல கான்ஃபரன்ஸ் ரூமுக்கு போவாங்களா?” என்று கேட்டான் விஜய்.

இந்தக் கேள்வி விக்னேஷை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது. “அப்ப இதுக்கு என்னடா அர்த்தம்? எதுக்குக்காக இப்படி பண்ணனும்?” என்று கேட்டான்.

“நாம இப்ப பணையக் கைதிகள் டா.. உன்னோட கேப்டிவ்ஸ (captives: பணையக் கைதி) சொகுசா ஏ.சி. ரூம்ல படுத்து தூங்க விடுவயா? இல்ல உன் கண்காணிப்புல வெச்சு இருப்பயா?” என்று கேட்டான் விஜய்.

விக்னேஷுக்கு நிலைமை புரிந்தது. “இப்ப என்னடா பண்ணலாம்? ரூமுக்கு போய் ஒளிஞ்சுக்கலாமா?” என்று கேட்டான்.

“ரூமுக்குப் போனா ஒளிஞ்சுக்க முடியாது. எல்லா ரூம்லயும் ரகசிய கேமிரா இருக்கு. நம்மை சுலபமா கண்டுபிடிச்சுடுவாங்க.”

“அப்ப என்ன தான் செய்யலாம்?”

“இங்க கேமிரா இல்லாத இடம் பாத்ரூம் மட்டும்தான். ஆனா அங்கயும் மைக் இருக்கும். நாம இப்ப பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சுக்கப் போறோம். ஆனா எந்தவித சப்தமும் செய்துட கூடாது. ஜாக்கிரதையா வா” என்றான் விக்னேஷ்.

இருவரும் மிக கவனமாக அடிவைத்து அந்த மறைவிடத்துக்குள் நுழைந்தனர்.

4

    “தேசிய விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம்” என்ற பெயர்ப்பலகையைத் தாங்கி மகேந்திரகிரி  மலையின் அடிவாரத்தில் அந்த மலைகளின் கம்பீரத்துடன் போட்டிபோட்டுக்கொண்டு நின்ற அக்கட்டிடத்தினுள் எப்போதும் போல் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மையப்பகுதியில் இருந்தபெரிய ஆறையில் “பா. அநிருத்தன், தலைமை ஆணையர்” என்று பொறிக்கப்பட்ட கண்ணாடி மேஜையின் பின்னால் அமர்ந்திருந்த மத்திம வயதுடைய அந்த நபர், அடுத்த நிமிடம் தாக்கக் காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல் அமைதியாய் கோப்புகளை வாசித்துத் திருத்தங்கள் செய்துகொண்டிருந்தார். அப்போது சிறிய பீப் ஒலியுடன் அவர் எதிரே இருந்த கணிணித்திரை “புதிய மின்னஞ்சல் வந்திருக்கிறது” என்று பெட்டிச்செய்தி காட்டியது. அந்த அதிர்ச்சியான செய்தியை அவர் எந்த சலனமும் இல்லாமல் வாசித்து முடித்தார். தன் மேஜையில் “தலைமைப் பாதுகாப்பு அதிகாரி” என்று எழுதியிருந்த கட்டத்தில் விரலால் ஒற்றி “மிஸ்டர் அருள்மொழி, உடனே என் அறைக்கு வாங்க” என்று அழைத்தார். “இதோ வருகிறேன் சார்” என்று ஒலிப்பெருக்கியில் மறுமொழி வந்தது.

இரண்டு நிமிடம் கரைந்த பின் அருள்மொழி வந்தார். அநிருத்தன் மௌனமாக கணிணித்திரையைத் திருப்பி அந்த மின்னஞ்சலைக் காட்டினார். மின்னஞ்சலை வாசிக்க வாசிக்க அருள்மொழியின் முகத்தில் அதிர்ச்சி குடிகொண்டது. அந்த ஏ.சி. அறையிலும் பலமாக வியர்த்துக்கொட்டியது.

“பதற்றப்படாதீங்க அருள்மொழி, நிதானம் இழக்கறது தான் தோல்வியோட ஆரம்பம்” என்றார் அநிருத்தன். “இப்ப என்ன சார் பண்ணலாம்?” என அருள்மொழி கேட்கும்போது, கணிணித்திரையில் “அவசர செய்தி” என்று தொடர்ச்சியான பீப் ஒலியுடன் பெட்டிச்செய்தி வந்தது. கணிணித்திரையை தன் பக்கம் திருப்பி அஞ்சலைத்  வாசித்த அநிருத்தன், கேலியாக ஒரு சிரிப்பை உதிர்த்தார். “லேட் நியூஸ் அருள்மொழி” என்றார்.

“புரியல சார்” என்றார் அருள்மொழி

“இன்னைக்குக் காலையில விண்வெளிக் கடுஞ்சிறைக்கு ஆட்களையும் பொருட்களையும் கொண்டுபோற ஷட்டில் ஆப்பரேட்டர் ஒருத்தர் அவர் வீட்டுல பிணமா கண்டுபிடக்கப்பட்டிருக்கார்.  ஆனால் ரெக்கார்ட் படி அவர் நேற்று மாலை கிளம்புன ஷட்டில விண்வெளிச் சிறைக்கு ஓட்டிட்டு போனதா இருக்கு.”


“அவரக் கொன்னுட்டு ஆள்மாறாட்டம் பண்ணி ஷட்டில கடத்தி இருக்காங்க”

“ஆமாம் அருள்மொழி. அதுமட்டும் இல்ல. அந்த ஷட்டில் இன்னைக்கு அதிகாலை விண்வெளிச் சிறையில் இருந்து கிளம்பி இருக்கு. அது கிளம்பின் பின் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் மூன்று பேர் காணாம போனத கண்டுபிடிச்சு இருக்காங்க. அதோட, அந்த ஷட்டில் நேராக பூமிக்கு வராம ஒரு விண்வெளி கேளிக்கைப் பூங்காவில டாக் (dock) ஆகியிருக்கு”

“அவ்வளவு பாதுகாபான சிறையில இருந்து எப்படி சார் அவங்க தப்பிச்சாங்க?”

“அவங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட உணவில் ஏதோ மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கு. அதை சாப்பிட்ட காவலாளிகள், கைதிகள் எல்லாரும் மயங்கிட்டாங்க. தப்பிச்சுப் போன தீவிரவாதிகள் உட்பட. ஷட்டிலைக் கடத்தின அந்த ஆசாமி சிறைக் கண்காணிப்பாளரோட அக்செஸ் கார்டை எடுத்து கைதிகள் அறைக்குள் நுழைஞ்சு இருக்கான். அந்த மூன்று தீவிரவாதிகளுக்கும் மயக்கம் தெளிய மருந்து கொடுத்து கூட்டிட்டுபோனது சிறைக் கேமிராவில பதிவாகி இருக்கு”

“யாரு சார் அந்த தீவிரவாதிங்க?”

“அவங்க பேர் உதய், மனோ, சிபி. அவங்க மூன்று பேரும் டோவப் (TOWaB : Take Our Waters Back) தீவிரவாத இயக்கத்த சேர்ந்தவங்க. உதயும் மனோவும் நம்ம இராணுவ ஆராய்ச்சிக் கூடத்த உளவு பார்த்ததுக்காக கைது செய்யப்பட்டாங்க. சிபி நம்ம ரோபோட் இராணுவத்தோட கன்ட்ரோல்ஸ ரிமோட் ஹேக் (Remote Hacking – இணையம் மூலம் தொலைவிலிருந்து கட்டுப்படுத்துதல்) செய்ய முயற்சி பண்ணினவன். ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த அவனை நம்ம கமேண்டோ வீரர்களும் விமானப் படையும் சேர்ந்து அதிரடித் தாக்குதல் நடத்தி கைது பண்ணிக் கொண்டுவந்தாங்க. இதனால இரண்டு நாட்டுக்கும் போர் ஏற்படும் சூழ்நிலையே வந்தது. அவன் செய்த சைபர் அட்டாக் (cyber-attack) சர்வதேச நீதிமன்றத்துல நிரூபனமானதால அவங்க அமைதியாகிட்டாங்க. ரொம்ப ஆபத்தானவன்”

“இப்ப என்ன பண்ணனும் சார்?”

“முதல்ல இந்த விஷயத்த பி.எம். கிட்ட சொல்லனும்”

“பி.எம். சென்னைல இல்ல சார். வெளிநாட்டு பயணத்துல இருக்காரு”

“தெரியும். அவரோட பெர்சனல் மெயிலுக்கு தகவல ஃபார்வேர்ட் பண்ணனும். அவர் அங்கிருந்தே பார்த்துக்குவார்”

தகவலை அனுப்பிய சில நிமிடங்களில் பி.எம்.மிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. குரலில் கொஞ்சம் கூட அச்சமோ பதற்றமோ இல்லாமல்  பேசி முடித்தார் அநிருத்தன்.

“பி.எம். என்ன சார் சொன்னார்? அவங்க டிமாண்ட்ஸ ஒத்துக்கற மாதிரி எதும் சொல்லிடலயே?” என்று கேட்டார் அருள்மொழி

“அது எப்படி ஒத்துக்க முடியும் அருள்மோழி? அவங்க பணமோ டைட்டானியமோ கேட்கல. அவங்க கேட்டது நம்ம ரோபோ இராணுவத்தோட பாசிட்ரான் மூளையின் (Positron brain: இயந்திர மனிதர்களை இயக்கும் செயற்கை மூளை ) டெக்னாலஜிய. அதக் கொடுத்தா நம்ம ஒட்டுமொத்த இராணுவத்தையே அவங்க கையில குடுக்கற மாதிரி. அத கண்டிப்பா தர முடியாது.”

“அப்ப நீங்க என்ன செய்யலாம் என்று முடிவு பண்ணியிருக்கீங்க சார்?”

“நான் முடிவு பண்ணல. பி.எம். முடிவு பண்ணிட்டார்”

5

கதையை மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பு, இந்த டோவப் (TOWaB) அமைப்பின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாம்.. அந்த வரலாற்றை அறிய நாம் 70 வருடங்கள் பின்னோக்கிப் போக வேண்டும். 70 வருடங்களுக்கு முன்பு, தமிழ்த் தேசம் என்ற ஒன்று இருக்கவில்லை. தமிழ்மண் இரண்டாகப் பிரிவுபட்டு இரண்டு நாடுகளின் அங்கமாக இருந்தது. இரண்டு நாடுகளும் தமிழ்பேசும் மக்களை வஞ்சித்தன. மறைமுகமாகவும் நேரடியாகவும் அவர்களை அழிக்க நினைத்தன. இதை உணர்ந்துகொண்ட தமிழர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அந்த நாடுகள் அந்தப் போராட்டங்களை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டன.

இதற்கிடையில், அப்போதைய தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, அங்கு புதிதாகப் பொறுப்பேற்ற மாகாண அரசு, தங்களை முழுமையான சுதந்திர நாடாக அறிவித்தது. தமிழகத்தின் வரி வருவாய் முழுவதையும் அந்தப் புதிய அரசே கைப்பற்றிக்கொள்ள, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை மத்திய அரசு சந்தித்தது. அதனால் முழு இராணுவ பலம் கொண்டு தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை. எனவே மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது. தமிழகம் தனி நாடாக மாற மக்கள் முடிவெடுத்தனர்.


ஆனால் அப்போதும் தமிழகத்தை வஞ்சிக்க அந்த அரசு நினைத்தது. தமிழகத்தின் மக்கள்தொகை விகிதத்துக்கு ஏற்ப இராணுவத் தளவாடங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஆனால் இராணுவத்தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டது. தமிழ்கத்தின் புவியியல் எல்லைக்குள் இருந்த கட்டமைப்புகள் தமிழகத்தின் உடமைகளாயின. ஆனால், அவற்றின் தொழில்நுட்பங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

பிரிவினை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அந்நாட்டுப் பிரதமர், தமிழ்மக்கள் முட்டாள்தனமான முடிவு எடுத்துவிட்டதாகச் சாடினார். அந்நாட்டு ஊடகங்கள் தமிழகம் 100 வருடங்கள் பின்தங்கிவிட்டதாகக் கிண்டல் செய்தன. ஆனால் தமிழ்த்தேசத்திற்குப் பிரதமராகப் பொறுப்பேற்றவர், இதைச் சவாலாக எடுத்துக்கொண்டார். அதை எப்போதும் நினைவில் கொள்ள, அவர் அதுவரை பின்பற்றப்பட்ட கிரிகோரியன் நாள்காட்டி முறையை தமிழ்த்தேச நாள்காட்டி முறைக்கு மாற்றினார். 2021 CE (Common Era) ஆம் வருடம் 1921 TE (Tamil Era) ஆனது. (முதல் அத்தியாயத்தில் கூட இது 1992 ஆம் வருடம் எனக் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். அது நம்முடைய கணக்கின்படி 2092 CE)

ஆனால் உண்மை நிலவரம் வேறு விதமாக இருந்தது. தமிழகம் மாநிலமாக இருந்தபோது அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திப் (GDP) பங்கு 16 %. ஆனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒட்டுமொத்த வருவாயில் 4%. அத்தனை காலம் தமிழகத்தை வஞ்சித்ததன் பலனை அவர்கள் அனுபவித்தனர். பிரிவினைக்குப் பின் வருவாய் பெருமளவு குறைந்தது. ஆனால் பொறுப்புகள் (Liabilities) குறிப்பிடும் அளவுக்குக் குறையவில்லை. இதனால் அந்நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

அதேநேரம் தமிழத்தேசியம் வலுவான நிதிநிலையை அடைந்தது. பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பிற்கான தொழில்நுட்பங்களை அவர்களே தயாரித்துக் கொண்டனர். வீழ்ந்துகொண்டிருந்த தன் அண்டை நாட்டின் அயல்வர்த்தகங்களைக் கைப்பற்றினர். சர்வதேச அரங்கில் மிகப்பெரிய பொருளாதார சக்தியாய் தமிழ்த்தேசம் உருவானது. காசுள்ளவன் சொல்தான் சபை ஏறும் என்பதற்கேற்ப அவர்கள் சர்வதேச அரசியலை நிர்ணயிக்கும் காரணியாக மாறினர். அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கடல்கடந்து இருக்கும் தன் தமிழ் உறவுகளை மீட்டனர். அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டு ஆழிசூழ் தீவில் கண்ணீர்சூழ் வாழ்க்கை நடத்திய மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடந்தது. இரண்டாகப் பிளந்துகிடந்த தமிழ்தேசம் ஒன்றாக இணைந்தது.

இச்சூழலில், அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்த்தேசத்தின் அண்டை நாடாகவும் சண்டை நாடாகவும் இருந்த அந்தப் பரந்த தேசத்தின் அரசு மீண்டும் ஒரு தவறான முடிவு எடுத்தது.  தமிழ்த்தேசத்தின் நதிநீர்ப் பங்கீட்டை இரத்து செய்தது. ஒரு துளி நீர்கூடத் தர முடியாது என அறிவித்தது. அவர்களின் திட்டம் தமிழ்த்தேசத்தைப் போரைத் துவக்கும் சூழலுக்குத் தள்ளி, எல்லைதாண்டிய அத்துமீறல் என்று முத்திரையிட்டு, அதன்மூலம்  சர்வதேசப் பொருளாதாரத் தடை ஏற்படுத்துவது.

தமிழ்த்தேசம் சுமூகமாகப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றது. ஒத்துழைப்பு கிடைக்காமல் போகவே, போருக்குத் தயாரானது. ஆனால் அதனிடம் மற்ற நாட்டினர் அறியாத ஒரு இரகசிய பலம் இருந்தது. அது அவர்களின் இயந்திர மனிதர்கள் படை (Robot Army). அதுவரை வேறு எந்த நாட்டிடமும் சுயமாக இயங்கக் கூடிய ஒரு இயந்திரப் படை இல்லை. எனவே அதுகுறித்த எந்த சர்வதேச விதிகளும் ஏற்படுத்தப்படவில்லை. அதுவரை எல்லைதாண்டிய அத்துமீறல் என்பது மனிதர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டைத் தாண்டி ஊடுறுவுவது என்றே இருந்தது. எனவே தமிழ்த்தேசம் இயந்திரப் படையைக் கொண்டு தாக்கியபோது அவர்களால் சர்வதேச உதவியை நாட முடியவில்லை.

தமிழ்த்தேசத்தின் இயந்திரப் படைகள் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருமுனைத்தாக்குதலில் ஈடுபட்டன. வடக்குப் பிரிவு வேகமாக முன்னேறி பெங்களூரு நகரத்தைக் கைப்பற்றியது. மேற்கில் இன்னும் பலவீனமாக இருந்த எதிரிப் படையைத் தோற்கடித்து மலபார் கடற்கரை வரை முன்னேறினர். கிட்டத்தட்ட மூன்று இலட்சம் வீரர்கள் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் ஒரு வீரர் கூட கொல்லப்படவில்லை. இயந்திரப்படைகள் மயக்க மருந்துத் தோட்டாக்களை (Tranquilizing darts) மட்டுமே பயன்படுத்தின.

வெறும் இரண்டு நாட்களே நீடித்த இந்தப்போரின் முடிவில், தக்காணப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களும், மிகப்பெரும் நிலப்பரப்பும் இயந்திரப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. தனக்குச் சொந்தமில்லாத நிலப்பரப்பை தமிழ்த்தேசம் திரும்ப ஒப்படைத்தது. ஆனால் நதிகள், அணைகள் மட்டும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. தேச எல்லையைத் திருத்தியமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அவர்களுக்கு உரிமையான நீரின் பங்கைத் தரவும் தமிழ்த்தேசம் முன்வந்தது.

ஆனால் போரின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள இயலாத அவர்கள், தமிழ்த்தேசம் அவர்களை நியாயமற்ற முறையில் ஏமாற்றி போரில் வென்றதாகக் கருதினர். எனவே தாங்களும் விஷமமான முறையில் பதிலடி கொடுக்க எண்ணினர். அவர்களுடைய உளவுப் பிரிவின் உதவியுடன், போரில் இழந்த நீர்வளத்தைத் திரும்பபெற, ஒரு தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்புதான் இந்த டோவப். இது வரை அந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தாக்குதல்கள் பெரும்பாலும் முறியடிக்கப்பட்டுள்ளன. அதுபோலவே இந்தத் தாக்குதலையும் முறியடிப்பார்கள் என் நம்புவோம். அடுத்த அத்தியாயத்தில், நாம் அபாயத்தில் விட்டுவந்த நாயகர்களின் நிலை என்ன ஆயிற்று என்று பார்க்கலாம்..

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Web Analytics