திங்கள், ஆகஸ்ட் 12, 2013

யுத்தம் - பாகம் 2

 கதையை மேற்கொண்டு தொடரும் முன்னர், சில அறிமுகங்கள் தேவைப்படுகின்றன. அந்த வெண்புரவியில் வந்த இருவரைத் தான் சொல்கிறேன். அந்த வயதான இளைஞர், ‘சுபர்ணராஷ்டிரம்’ தேசத்தின் அரசர், விதுரசேனன். சிறந்த மதியூகி, மிகச் சிறந்த வீரர். இரண்டாமவர், அவரது ஒரே புதல்வன், இளவரசர் அமரகீர்த்தி. தந்தையின் வீரத்தை முழுதாகவும் விவேகத்தை ஓரளவும் பெற்றவர். அவர்கள் இருவரும் ஒரு முக்கியமான இராஜாங்க விஷயத்தை விவாதிக்க அவர்களின் அண்டை நாடான துர்காபுரிக்கு வந்துள்ளனர்.

தோரண வாயிலைத் தாண்டி, ஒரு காத தூரம் வந்ததும், ஸ்ரீதுவார் என்ற ஒரு அழகிய, பிரம்மாண்டமான நகரம் இருக்கிறது. பெயருக்கேற்றார் போல, ஒவ்வொரு அங்குலமும் செல்வத்தால் நிரம்பி வழியும் செல்வநகரம் அது. அங்குதான் நம் அரச விருந்தினர் இருக்கின்றனர். காட்டு வழியில் நீண்ட பிரயாணம் செய்த களைப்பு நீங்க, அன்று ஒரு நாள் அங்கு தங்கி இளைப்பறிவிட்டு, பின் பயணத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.

அரசரும் இளவரசனும் மதியம் உணவருந்த அமர்ந்திருந்தனர். துர்காபுரியில் மட்டுமே காணக்கூடிய, இராஜாலம் மரத்தின் வட்ட வடிவ இலைகளில் விருந்து பரிமாறப்பட்டது. இராஜ விருந்தை உண்ட பின், ஓய்வறைக்கு இருவரும் வந்தனர்.

“நமக்காகவேண்டி, நம் நாட்டில் விளையும் இளஞ்சாமை தானியத்தைத் தருவித்து சமைத்திருக்கிறார்கள். அருமையான விருந்தோம்பல்” என்றான் இளவரசன். மன்னர் விதுரசேனர் கிண்டலாகப் புன்னகைத்தார்.

“என்ன அப்பா.. உங்கள் புன்னகையே சரியில்லையே.. உண்மை என்ன?”

“நமக்காக எதுவும் தருவிக்கப்படவில்லை அமரகீர்த்தி.. இந்த நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக எல்லாரும் இளஞ்சாமை உணவைத்தான் உண்ணுகிறார்கள்”

“என்ன சொல்கிறீர்கள் தந்தையே..  துர்காபுரியின் செவ்வரகு தானியம்  சுபர்ணாஷ்டிரத்தில் கூட பிரசித்தி பெற்றதாயிற்றே.. இவர்களின் பாரம்பரிய உணவை விடுத்து இவர்கள் ஏன் வேறொரு தானியத்திற்கு மாறினர்?”

“நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் என்று உனக்குத் தெரியுமல்லவா?”

“நாம் ஏற்றுமதி செய்யும் இளஞ்சாமையில் விலை குறித்து ஒப்பந்தம் செய்வதற்கு”

உனக்கு வேடிக்கையாய் இல்லையா?”

“நீங்கள் எதைச் செய்தாலும் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்தேன்”

“எல்லாம் காரணமாகத் தான். சொல்கிறேன். பொறுமையாக்க் கேள். இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இருபது வருடங்களாக இதைத் திட்டமிட்டு வருகிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு வரை, இவர்கள் இளஞ்சாமையைப் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். செவ்வரகு ஏற்றுமதியை இவர்கள் துவக்கும் வரை.

 நான் தான் செவ்வரகை இங்குள்ள உள்ளூர் வணிகர்களிடம் இருந்து சந்தை விலையைப் போல இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க ஏற்பாடு செய்தேன். செவ்வரகு நம் நாட்டுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதால் உள்நாட்டு சந்தையில் அதன் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. அதற்கு மாற்றாக, இளஞ்சாமையை அதைவிட குறைவான விலைக்கு இங்கு இறக்குமதி செய்யப்பட்டது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இளஞ்சாமைக்கு மாற ஆரம்பித்தனர். அதோடு வருடாவருடம் செவ்வரகு வாங்கும் விலையை ஏற்றி, இளஞ்சாமை விற்கும் விலையை குறைத்துக்கொண்டே வந்தேன். இப்போது இன்னாட்டில் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே செவ்வரகை உண்ணுகின்றனர். சாதாரண மக்களின் உணவு இளஞ்சாமை தான்.

இந்த வருடம் இளஞ்சாமையின் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அதனால்தான் ஒப்பந்தம் செய்ய அழைத்திருக்கிறார்கள்”

 “ஆனால் இதெல்லாம் எதற்காக?”

“எதற்காக என்றா கேட்கிறாய்? இந்த நாட்டைக் கைப்பற்றத்தான்”

“அதற்கேன் தந்தையே இந்தப் பகீரத பிரயத்தனம்? நேரடியாகப் படையெடுத்து வந்திருக்கலாமே.. நம்மிடம் இல்லாத படைபலமா? இங்குள்ள வீரர்களின் விரல்களின் எண்ணிக்கையை விட, நம் வீரர்களின் தலைகளின் எண்ணிக்கை அதிகமாயிற்றே.. கால்விரல்களையும் சேர்த்தால் கூட…”

“நான் தான் ஏற்கனவே கூறினேனே.. துர்காபுரிக்குள் ஆயுதத்துடன் நுழைவது சாத்தியமில்லை என்று”

“ஒரு மூட நம்பிக்கைகாகவா இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறீர்கள்?”

“அது மூட நம்பிக்கையா இல்லை உண்மையா என்பதை இன்று மாலை தெரிந்துகொள்வாய் அமரகீர்த்தி”

“சரி. அப்படியே வைத்துக்கொண்டாலும், நாம் தானிய விலையை உயர்த்துவதால் அவர்கள் பணிந்து விடுவார்களா? நம்மைவிட குறைவான விலைக்கு விற்கும் தேசத்திடம் வாங்க முற்பட்டால்?”

“இப்போதைக்கு துர்காபுரியுடன் வாணிகத்தில் ஈடுபடும் ஒரே நாடு நாம்தான். அவர்களுக்கு இருக்கும் ஒரே அண்டை நாடும் நாம்தான். நம்மை விட்டு வேறொரு நாட்டிடம் வாங்க முயன்றாலும் அதை நம் நாட்டின் வழியேதான் கொண்டுவர வேண்டும். அதை நான் அனுமதிப்பேன் என்றா நினைக்கிறாய்?”

“சரி. அவர்கள் மீண்டும் செவ்வரகுக்கே மாறிவிட்டால்? அதுதான் அவர்கள் நாட்டிலேயே போதுமான அளவு விளைகிறதே.. நம்மிடம் அதை விற்கத் தடை செய்துவிட்டால்? அப்போது அவர்களுக்கு உள்ளூர் சந்தையில் குறைந்த் விலைக்கு அது கிடைக்குமே..”

“செவ்வரகு கடினமான தானியம். எளிதில் செரிமானம் ஆகாது. நீண்ட காலமாக இளஞ்சாமை போன்ற மெலிதான தனியத்தை உண்ட அவர்களால் எளிதாக செவ்வரகுக்கு மாற முடியாது”

“இது மிகவும் சிக்கலான தீர்வாக இருக்கிறது தந்தையே”

“இதில் ஒரு சிக்கலும் இல்லை மகனே.. படையெடுப்பின் முதல் படி என்ன?”

“முற்றுகை”

“அதைத்தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். துர்காபுரி நாடும் ஒரு வலிமையான கோட்டையைப் போலத்தான். அதைகைப்பற்ற முற்றுகை இட்டிருக்கிறோம். முற்றுகையிடப்பட்ட கோட்டை எதனால் வீழும்?”

“கோட்டைப்பாதுகாப்பு தகர்ந்தாலோ அல்லது உள்ளிருக்கும் குடிகளின் வாழ்வாதாரம் அழிந்து, மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டாலோ மட்டுமே கோட்டை வீழும்”

“அதேதான். துர்காபுரியின் பாதுகாப்பு தகர்க்க முடியாதது. அதனால்தான் நாம் இரண்டாவது வழிமுறையைப் பின்பற்றுகிறோம்”

“அப்படியானால் ஒரு யுத்தத்தைத் துவங்கிவைக்கத்தான் நாம் இங்கு வந்திருக்கிறோமா?”

“இல்லை மகனே.. இருபது ஆண்டுகளாக நடக்கும் நிழல் யுத்தத்தை முடித்து வைக்கத்தான் உன்னை அழைத்து வந்திருக்கிறேன். நீ சென்று சிறிது ஓய்வெடு. மாலை உனக்கான ஆச்சரியம் காத்திருக்கிறது.”

குழப்பம் அறிவை முற்றுகையட, இளவரசன் அவ்விடம் விட்டு அகன்றான். இளவரசனைக் கொண்டு எளிதாய் இந்த நாட்டை அடைய விதுரசேனன் கணக்கிட்டிருக்க, விதி வேறுவிதமாய் இவற்றை முடிவுக்குக் கொண்டுவர கணக்கிட்டிருந்தது. இப்போதைக்கு நம் இளவரசன் மாலையின் ஆச்சரியத்திற்காகக் காத்திருக்கிறான். அவனுடன் நாமும் சிறிது காத்திருப்போம்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Web Analytics