திங்கள், ஆகஸ்ட் 12, 2013

துன்பச்சுற்றுலா - பாகம் 2

6

நம் நாயகர்கள் இருவரையும் ஆபத்தில் விடிவிட்டு நாம் மிக நீண்ட நேரம் நீண்ட தூரம் வந்துவிட்டோம். அவர்களுக்கு என்னவாயிற்றோ? காமிராவின் கண்களுக்குப் படாமலிருக்கக் குளியலறைக்குள் தஞ்சம் புகுந்த நம் நாயகர்கள் என்ன ஆனார்கள் என்று போய்ப் பார்க்கலாம்…

சப்தம் எழும்பாமல் அடிமேல் அடிவத்து உள்ளே நுழைந்தான் விஜய். அவனைப் பின்தொடர்ந்தான் விக்னேஷ். அவர்கள் உள்ளே நுழையவும் மித்ரா அதன் திரையில் ஒரு சிறிய அம்புக்குறியைக் காட்டியது. அது சுட்டிய திசையில் சென்ற விஜய், சுவற்றில் ஒரு இடத்தில் சென்று விரலால் மெல்ல அழுத்தினான். அந்த இடத்தில் குறுந்தட்டு இயக்கி (CD player) திறப்பதுபோலச் சதுரமாக ஒரு சிறிய பெட்டி வெளிவந்தது. அதை எடுத்து தரையில் ஓங்கி அடிக்க அது சிதறுகாய் போல உடைந்து தெரித்தது.

பதறிய விக்னேஷ், சப்தம் செய்யாதே என்பது போல சைகை காட்டினான். லேசாக சிரித்த விஜய், “பயப்படாத டா.. நான் இப்ப உடைச்சது தான் இந்த அறையில் எழும் ஒலிகளை கண்காணிக்கற கருவி. இனிமே பிரச்சனை இல்ல” என்றான்.

“சரி டா.. ஆனால் நாம இப்படியே எவ்ளோ நேரம் இருக்க முடியும்? அடுத்து என்ன பண்ணலாம்” என்று கேட்டான். அதற்கு விஜய் பதில் கூறும் முன், அங்கிருந்த ஒலிப்பெருக்கிகள் ஒலித்தன.

“மனோ, உதய்! கவனியுங்க.. புலி கூப்பிடுது.. ரவி புலியோட பேசப்போறான். எல்லோரும் கேட்கட்டும். ஸ்பீக்கர்ல ரிலே பண்ணறேன்” என்று அந்தக் குரல் கூறியது. புலி தமிழ்த்தேசத்தின் பிரதமருக்கு அவர்கள் வைத்த பட்டப்பெயர்.

 சிறிது நேரத்தில் ரவியுடைய குரல் ஒலிப்பெருக்கியில் வந்தது. ரவிதான் இந்தக் குழுவுக்குத் தலைவன். சரித்திரத்தின் முதல் விண்கலக் கடத்தலை நிகழ்த்திய சாதனையாளன்.

“சொல்லுங்க பி.எம். சார்… என்ன முடிவு பண்ணியிருக்கீங்க”

“தீவிரவாதிக்ளோட அச்சுறுத்தலுக்கு எப்பவும் தமிழ்த்தேசியம் அடிபணியாது. உங்கள் நிபந்தனைகளை நிறைவேத்த முடியாது.”

“200 வருஷமா ஒரே வசனத்தை மாத்தாம பேசறீங்களே சார்.. ஒருவேளை உங்களுக்கு தாக்கிக் கைப்பற்றும் (Boarding and Capturing) கமாண்டோக்களைக்  கொண்டு எங்களைப் பிடிக்கற எண்ணம் இருந்தா அதைக் கைவிட்டுடுங்க.. அது நடக்காது. இந்த விண்வெளி நிலையம் முழுக்க எங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கு. இதுக்குள்ள வெளி ஆட்கள் யாரும் எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது. இதை உங்க ஆட்கள் சொல்லியிருப்பாங்க..  எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தவிர உங்களுக்கு வேற வழி இல்ல”

“உங்கள் கோரிக்கைகளை நிறைவேத்துறது என் நாட்டையே அழிக்கறதுக்கு சமம். அது கண்டிப்பா நடக்காது”

“இப்படி விவாதம் பண்ணிட்டு இருக்க எங்களுக்கு நேரம் இல்ல. உங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம் தரேன். அதுக்குள்ள அந்த இராணுவத் தொழில்நுட்பத்தை ஒப்படைக்கலைனா அடுத்த ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒரு உயிர் போகும்”

“அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு நான் 1 மணி நேரம் தர்ரேன். சரணடையறதுக்கு. சரணடையலைனா ஒரு மணி நேர முடிவில அந்த விண்வெளி நிலையத்தை நோக்கி எங்கள் மோதி அழிக்கும் தானியங்கி விமானம் (Kamikaze Drone  )  கிளம்பும். இந்த நாட்டில இருக்குற 28 கோடி பேரோட பாதுகாப்புக்காக 238 உயிர்களைத் தியாகம் செய்றது தப்பு இல்லை. யோசிச்சு முடிவெடுங்க”

அத்துடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த விண்வெளி நிலையத்திலிருந்த தீவிரவாதிகள், பயணிகள், நம் நாயகர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

“அப்ப இன்னும் 1 மணி நேரத்துக்குள்ள நாம எப்படியாவது தப்பிக்கணும் டா” என்றான் விக்னேஷ்.

“எப்ப இருந்து டா இவ்வளவு சுயநலவாதியா ஆன? நாம இந்த விண்வெளி நிலையத்தில இருக்கற எல்லோரையும் காப்பாத்த முயற்சி செய்வோம்” என்றான் விஜய்.

“நம்மால முடியுமா டா?”

“முயற்சி செய்வோம். நம்மால முடியும் நம்பு. நம்பிக்கைதான் வெற்றிக்கு முதல்படி”

“தத்துவம் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா நாம இத எப்படி செய்யப் போறோம்?”

“பொறு. சொல்ரேன்”

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் அதே நேரம், கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்த ரவி, சிபியிடம் “புலி பேசுனத மறுபடியும் பிளே பண்ணு” என்று கேட்டான்.

“இந்த நாட்டில இருக்குற 28 கோடி பேரோட பாதுகாப்புக்காக 238 உயிர்களைத் தியாகம் செய்றது தப்பு இல்லை. யோசிச்சு முடிவெடுங்க” என்று ஒலித்தது.

“மனோ மொத்தம் 236 கைதிகள் இருக்கறதாத் தான் சொன்னான். பட்டியலைச் சரிபார்த்து சொல்லு” என்றான் ரவி. சிபியும் கணிணித் திரையில் பார்த்து, “238 பயணிகள் இருக்கறதா இங்கயும் பதிவாகி இருக்கு. இரு. யார் அந்த இரண்டு பேர்னு கண்டுபிடிச்சு சொல்ரேன்” என்றான்.

கான்ஃபரன்ஸ் அறையின் காமிராப் பதிவுகளை எடுத்த சிபி, முக ஒப்பறியும் அமைப்பின் (Face Recognition System) மூலம் ஆய்ந்தான். சில நொடிகளில் அது விஜய்யையும், விக்னேஷையும் காட்டிக்கொடுத்தது.

“இந்த இரண்டு பேரைத் தான் காணல” திரையில் அவர்கள் நிழற்படத்தைக் காட்டினான் சிபி.

“எங்க ஒளிஞ்சு இருக்காங்க? கண்டுபிடிச்சயா?” என்றான் ரவி

“அவங்க எந்த கேமிராவிலும் தெரியல. ஒருவேளை பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சு இருக்கலாம்”

“பதிவான வீடியோல கடைசியா எங்க இருக்காங்கனு பாரு”

ஓரிரு நிமிடங்களில் அதைக் கண்டுபிடித்தான் சிபி.

“கடைசியா 12 ஆம் பகுதியில் இருக்கும் பாத்ரூமுக்குள்ள போறது பதிவாகி இருக்கு.”

“அவங்க விவரங்கள உதய்க்கு அனுப்பு.“

7

“மித்ரா! இந்த விண்வெளி நிலையத்தோட வயர்லெஸ் கண்காணிப்புக் காமிரா கனெக்ஷன் எல்லாம் என்க்ரிப்ட்(Encrypt : மறைமொழியாக்கம் ) செய்யப்பட்டிருக்கா?” என்று தன் மின்னணுக் காரியதரிசியிடம் கேட்டான். அது ஒரு பெருக்கல் குறியைக் காட்டியது. “முழு இயங்குநிலைக்கு மாறு” என்று கட்டளையிட, “இயங்குநிலை மாற்றப்பட்டது” என்று பதிலளித்தது. “சரி. அந்த என்கிரிப்ஷன்?” என்று விஜய் கேட்க, “எதுவும் இல்லை. ப்ளைன் ஆகத்தான் இருக்கிறது” என்று பதிலளித்தது.

விக்கி மிக ஆச்சரியமாக, “இது பேசுமா டா?” என்று கேட்டான்.

“பாடவே செய்வேன். என்ன பாட்டு வேணும்?” என்று கேட்டது மித்ரா.

“இவ்ளோ நேரம் அது பேசிக் மோடில் இருந்தது டா. இது பெரிய வாயாடி. பாக்கத்தான போற..” என்றான் விஜய். விக்கி வாய்பிளந்து நின்றான்.

“நீங்க பாக்கவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கு” என்று அறிவித்துவிட்டு, மித்ரா தன் திரையில் ஒரு காணோளியைக் காட்டியது. அதில் ஒரு நபர் கையில் லேசர் துப்பாக்கியுடன் வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தான். “பெயர் உதய். டோவப் தீவிரவாதி.” என்றும் அறிவித்தது.

விக்கி ஆச்சரியத்தில் உறைந்து போனான். “உயிரோட இருந்தா பின்னால ஆச்சரியப்பட்டுக்கலாம். இப்ப வர்றவன கவனிக்கணும்.” என்றான் விஜய்.

“சரி என்ன பண்ணலாம்?”

“ஏன் எப்பவும் என்னயே கேக்குற? ஆக்ஷன் எல்லாம் உனக்குத்தான் நல்லா வரும் நீயே இத சமாளி.”

“ஆக்ஷனா? அது நல்லா வரும்.. நீ எங்கயாச்சும் பாதுகாப்பா போய் ஒளிஞ்சுக்க. இத நான் பாத்துக்கறேன்.”

“அவன் கைல துப்பாக்கி இருக்கு. வீரத்த கொஞ்சம் கட்டுப்படுத்திக்க.”

“எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ வேகமா பொய் ஒளிஞ்சுக்க.”

“பேசுனது போதும். அவன் வந்துட்டான். போய் ஒளிஞ்சுக்குங்க.” இடைமறித்தது மித்ரா.

சில நொடிகளில் உதய் உள்ளே நுழைந்தான். “நீங்க இரண்டு பெரும் இங்கதான் ஒளிஞ்சு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். வெளிய வாங்க.”

எந்த சலனமும் இல்லை.

“ஒழுங்கா வெளிய வாங்க. நானா கண்டுபிடிச்சா உடனே கொன்னுடுவேன்.”

“வர்றோம். சுட்டுடாத” என்று கேட்டது விஜயின் குரல். விஜய், விக்கி இருவரும் கைகளை உயர்த்தியபடி வெளியே வந்தனர். துப்பாக்கி அவர்கள் மார்பைக் குறிபார்த்துக்கொண்டிருந்தது. மெல்ல உதயை நோக்கி வந்தனர். அவர்கள் அவனை நெருங்கவும், வாசலில் இருந்து அதிகாரமாக ஒரு குரல் “உதய்” என அழைத்தது. இருவர் முகத்திலும் அதிர்ச்சி.. என்ன என்பது போல உதய் திரும்பிப் பார்த்தான்.

அவ்வளவுதான்..  ஒரே நொடியில் விக்கியின் கால்கள் காற்றில் சுழன்றன. துப்பாக்கி எகிறிப் பறந்தது. அடுத்த உதை உதயின் தலையில் விழ, அவன் மூர்ச்சையாகித் தரையில் விழுந்தான்.

“இவனை என்ன பண்ணலாம்?” என்று கேட்டான் விக்கி.


“அவன் இங்கதான் வந்தான்னு இவன் கூட்டாளிகளுக்குத் தெரியும். வேற எங்கயாச்சும் ஒளிச்சு வைக்கணும்.”

“எங்க?”

“இரு வர்றேன்”

நேராக வாசல் அருகில் சென்றவன், நிலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்த மித்ராவை எடுத்து கைகளில் மாட்டிக்கொண்டான்.

“எப்படி.. சரியான நேரத்தில குரல் கொடுத்தேனா”


“கரக்டா செய்த மித்ரா.. இப்ப நம்ம இந்த காமிராவ எல்லாம் குருடாக்கணும்.”

“அத எல்லாம் ஆப் பண்ணிட்டா நம்மள கண்டுபிடிச்சுடுவாங்களே”

“ஆப் பண்ணாத. இந்த நிமிஷம் நடக்கற வீடியோவையே லூப் பண்ணிக்கிட்டு இரு”

“பண்ணிட்டேன்”

“குட் மித்ரா.. அப்படியே இவன் மயங்கிக் கிடக்குறத ஒரு போட்டோ எடு” என்று கூறி கையை தரையில் கிடக்கும் உதயை நோக்கி நீட்டினான். “ம்ம். எடுத்தாச்சு.” என்றது மித்ரா.

“சரி விக்கி.. வா. இவன தூக்கிட்டுப் போய் வேற எதாச்சும் ஒரு ரூம்ல போடணும். அந்த லேசர் துப்பாக்கியையும் எடுத்துக்க. தேவைப்படும்”

இருவரும் அவனைத் தூக்கிக்கொண்டு வெளியேறினர்.

__________

கன்ட்ரோல் ரூமில் இருந்த ரவியும் சிபியும் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் நின்றனர். அவர்கள் முன்னிருந்த எல்லாத் திரையிலும் மயங்கிக் கிடக்கும் உதயின் நிழற்படம் பளிச்சிட்டது.

“அவங்க சாதரணமான ஆட்கள் இல்லை. உடனே மனோவுக்கு எச்சரிக்கை அனுப்பு. கன்ட்ரோல் எல்லாத்தையும் சரிபண்ணி அவங்க எங்கன்னு கண்டுபிடி” என்றான் ரவி.

சிபி கான்ஃபரன்ஸ் ரூமின் ஒளிப்பெருக்கிகளை ஆன் செய்து, “மனோ! உடனடியா ரிப்ளை பண்ணு. அவசரம்.” என்றான். உடன் காமிரா திரைகள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பின. காமிராவின் முன் விக்கியும் விஜயும் நின்று சிரித்துக்கொண்டிருந்தனர்.

விக்கி காமிராவை நோக்கி, “மனோ இப்ப பேசும் நிலைல இல்லை. உங்களுக்கு என்ன வேணும்?” என்றான். அவன் பின்னால் மனோ பிணமாகக் கிடந்தான்.

8

கான்பிரன்ஸ் ரூமில் மனோ பிணமாகக் கிடப்பதைப் பார்த்து சிபியும் ரவியும் மிகவும் குழம்பிப் போயினர்.. நமக்கும் என்ன நடந்தது என்று தெரியாதல்லவா? கொஞ்சம் பின்னோக்கி செல்லலாம்..

மயக்கத்தில் இருந்த உதயை வேறொரு அறையில் வைத்து பூட்டிய பின், இருவரும் நேரே கான்பரன்ஸ் ரூமுக்கு சென்றனர். ரகசியமாக அறையின் உள்ளே நுழைந்தவர்கள், மனோ சுதாரிக்கும் முன் அவனை சுட்டு வீழ்த்தினர். அதன்பின் விஜய், தன ஏற்கனவே வைத்திருந்த, உதய் மயக்கத்திலிருக்கும் நிழற்படத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினான். அதைப் பார்த்தபின்தான் சிபியும் மனோவும் மனோவை அழைத்தனர். சரி.. இப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..

சிபியும் ரவியும் மனோவின் உடலைப் பார்த்திருப்பார்கள் என்று உறுதியானவுடன் விஜய் அந்த அறையின் எல்லா காமிராவையும்,ஒலிவாங்கியையும்(mic) உடைத்தான்.

“என்னடா பண்ணற? இப்ப எதுக்கு அவங்கள உசுப்பேத்தி விடற” என்று கேட்டான் விக்கி. அந்த அறையில் இருந்த பயணிகள் எல்லோரும் குழப்பத்துடன் இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அப்பத்தான் வெளிய வருவாங்க.. நம்மால அவங்க ரெண்டு பேரையும் கன்ட்ரோல் ரூமுக்குள்ள வெச்சு  ஒண்ணா சமாளிக்க முடியாது. கன்ட்ரோல்ஸ்ல எதாச்சும் பண்ணி இந்த விண்வெளி நிலையத்தையே அழிச்சுடுவாங்க. அதான் அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க இப்படி பண்ணினேன். இப்ப அவங்களில் ஒருத்தன் மட்டும் இங்க வருவான்” என்றான் விஜய்..

“அப்ப அவன நம்ம சுட்டுட்டு அடுத்தவன கவனிச்சுக்கலாம்னு சொல்றியா?”

“அதுக்கெல்லாம் நேரம் இல்லை. இன்னும் 20 நிமிஷத்தில இந்த இடத்த அழிக்க ட்ரோன (drone) அனுப்பிடுவாங்க. 25 ஆவது நிமிசத்தில இந்த இடமே இருக்காது”

“அப்ப ஷட்டில்ல ஏறி தப்பிச்சு போயிடலாம்”

“முடியாது. ஷட்டில கன்ட்ரோல் ரூமில இருந்துதான் எஜெக்ட்(eject) பண்ணனும்.”

“அப்ப என்னதான் பண்ணறது”

“நான் கன்ட்ரோல் ரூமுக்கு போறேன். நீ இவங்க எல்லோரையும் ஷட்டிலுக்கு கூட்டிட்டு போ”

“சரி”

“போகும்போது இந்த டோர் பேனல உடைச்சுடு. வீடியோவைப் பாத்துட்டு அவன் நேரா இங்கதான் வருவான். டோரை உள்ளிருந்து திறக்க முடியாது. உள்ளேயே மாட்டிக்குவான். இந்தா இத வெச்சிக்க. இது ஷட்டில திறந்து உள்ள போக உதவி செய்யும்” என்று சொல்லி மித்ராவைக் கழற்றிக் கொடுத்தான். அது அவன் வாழ்க்கையையே மாற்றப்போகிறது என அப்போது அவனுக்குத் தெரியாது.

“கவனமா இரு டா.. உள்ள ஒருத்தன் இருப்பான்ல. இதையும் கொண்டு போ” என்று மனோவின் துப்பாக்கியை எடுத்தது கொடுத்தான் விக்கி.

“நீயும் பத்திரம் டா” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் விஜய். ஏற்கனவே எல்லா காமிராவையும் செயலிழக்க செய்திருந்தாலும் நேர்வழியாக கன்ட்ரோல் ரூமை நோக்கி சென்றால் எதிரே வருபவனிடம் சிக்க நேரிடும் என எதிர்திசையில் சுற்றிக்கொண்டு சென்றான்.

கன்ட்ரோல் ரூமின் வாசலை அடைந்தான். அந்த அறையில் நுழைய கடவுச்சொல்லை(passsword) பதிவு செய்ய வேண்டும். ஆனால் அங்கு நான்கு விசைப்பலகைகள் இருந்தன. தவறான கடவுச்சொல்லை தந்தாலோ அல்லது தவறான விசைப்பலகையில் விசையை(key) அழுத்தினாலோ தரை திறந்து அடியில் இருக்கும் காப்பறையில் விழ நேரிடும் என அவன் அறிவான். ஏற்கனவே கடவுச்சொல்லையும் சரியான விசைப்பலகை எது என்பதையும் மித்ரா மூலம் கேட்டுத் தெரிந்துவைத்து இருந்தான். அதை உள்ளிட்டு, உள்ளே நுழைந்தான். அங்கு சிபி மிகத் தீவிரமாக காமிராவின் கட்டுப்பாடுகளை திரும்பக்கொண்டுவர கணினியுடன் போராடிக்கொண்டிருந்தான். எனவே விஜய் வந்தததை கவனிக்கவில்லை. விஜய் எளிதாக சிபியை சுட்டு வீழ்த்தினான். எல்லாம் எளிதாக முடிந்தது என்று எண்ணி மகிழ்ச்சியடைந்தான். ஆனால் புயல் இன்னும் ஓயவில்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை.

கதவை மீண்டும் மூடிவிட்டு சென்று கணினியில் அமர்ந்தவன், காமிராக்களை மீண்டும் இயங்கச் செய்தான். பின் ஷட்டிலை எஜெக்ட் செய்யும் வேலைகளில் இறங்கினான். சிறிது நேரம் சென்று, வாசலை நோக்கி யாரோ வருவதை காமிரா திரையில் கவனித்தான். விக்கிதான் தன்னைத் தேடி வந்திருப்பான் என்று நினைத்து திரையை உற்று கவனித்தான். ஆம். விக்கிதான் வந்து நின்றிருந்தான். ஆனால் தனியாக இல்லை.

9

கான்பிரன்ஸ் அறைக்கு பணயக் கைதிகளைத் தேடிச் சென்ற ரவியைக் கொஞ்சம் தேடிச் செல்வோம்.. மனோ கொல்லப்பட்டதைப் பார்த்து கோவத்துடன் அவர்களைத் தேடிச் சென்றவன் அந்த அறையில் யாருமே இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அறை முழுவதும் சுற்றித் தேடியவன், யாரும் ஒளிந்திருக்கவில்லை என உறுதி செய்துகொண்டு, வெளியேறச் சென்றான். அப்போதுதான் கவனித்தான்.. அந்தத் தானியங்கிக் கதவைத் திறக்கும் விசை (button) சிதைக்கப்பட்டிருந்தது. அவனை உள்ளேயே அடைத்துவைக்க நம் நாயகர்கள் செய்த வேலை என்பதை நாம் அறிவோம்.. அனால், தாளை நீக்கித்தான் கதவைத் திறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது அவர்களுக்குத் தோன்றவில்லை.. தன் லேசர் துப்பாக்கியால் கதவின் தாளைச் சுட, அது தெறித்துத் திறந்தது.

அனைவரும் தப்பித்து எங்கு செல்வார்கள் என்பது அவனுக்குத் தெரியும். நேரே விண்கலத்தை நோக்கிச் சென்றான்.. கவனமாக, முயலைக் குறிவைக்கும் நரியைப் போல, பதுங்கி மறைந்து சென்றான்..  ஷட்டிலின் வாயிலில், விக்கி நின்றுகொண்டு இருந்தான். ஒவ்வொருவராக ஷட்டிலினுள் செல்ல உதவிக்கொண்டு இருந்தான். இன்னும் நான்கு பேர் தான் ஷட்டிலில் ஏற வேண்டும். அனைவரும் உள்ளே நுழையும் வரை காத்திருந்த ரவி, தனியாக விஜய் வருவதற்காக நின்றிருந்த விக்கியின் பின்புறமாக சென்று, அவன் முதுகில் துப்பாக்கியை அழுத்தி, கைகளை மேலே தூக்கக் கட்டளையிட்டான். பின்பு, நாயகன் முதுகில் வில்லன் துப்பாக்கியை வைத்தவுடன் என்ன நடக்க வேண்டுமோ, அவை எல்லாம் நடந்தன. நாயகன் துப்பாக்கியைத் தட்டிவிட்டு வில்லனைத் தாக்குதைத் தவிர. ஷட்டிலின் கதவைப் பூட்டி, பயணிகளை உள்ளே அடைத்தான். விஜய் எங்கு இருப்பான் என்று ரவிக்குத் தெரியும். விக்கி இல்லாமல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து விஜயை வெளியே கொண்டுவர முடியாது என்பதும் அவனுக்குத் தெரியும். விக்கியைக் கூட்டிக்கொண்டு, மன்னிக்கவும், இழுத்துக்கொண்டு, கட்டுப்பாட்டு அறையை நோக்கிச் சென்றான்..

கட்டுப்பாட்டு அறையில் ஷட்டிலை அனுப்பும் வேலைகளில் இருந்த விஜய், காமிராவில் ரவி விக்கியை துப்பாக்கி முனையில் அழைத்து வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தான். முதல் முறையாக அவன் திட்டம் தோல்வி அடைந்தது. விக்கி இப்படி சிக்குவான் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல், அப்படியே உறைந்து நின்றான்.


கட்டுப்பாட்டு அறையின் வாசலை அடைந்த ரவி, கதவைத் திறப்பதற்கான கடவுச்சொல்லை விசைப்பலகையில் உள்ளிடச் சென்றான். ஆனால், இந்த சந்தர்ப்பத்திற்குத் தான் விக்கி காத்திருந்தான். அருகில் இருந்த மற்றொரு விசைப்பலகையில் அவன் விசையை அழுத்தினான். தவறான விசைகளை அழுத்தினால் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியுமே.. தரை திறந்து, அதன் அடியில் இருந்த காப்பறையில் அவர்கள் இருவரும் விழுந்தனர். மேலே கதவு மீண்டும் மூடிக்கொள்ள, அவர்கள் அந்தப் அறையில் சிறை வைக்கப்பட்டனர்.

கோவத்தின் உச்சத்தில் இருந்த ரவி, விக்கியின் வயிற்றில் ஓங்கி உதைக்க, அவன் வலுவிழந்து தரையில் சரிந்தான். மற்றொரு சமயமாக இருந்தால் இந்நேரம் விக்கியின் உயிர் போயிருக்கும். ஆனால், இப்போது விக்கிதான் ரவியும் துருப்புச்சீட்டு. அவனை வைத்துத்தான் ரவி தப்பிக்க வேண்டும். அந்த அறையிலும் காமிராவும் ஒலிவாங்கியும் இருக்கும் என அவனுக்குத் தெரியும். காமிராவைப் பார்த்து, “ஒழுங்கா கதவைத் திற.. இல்லைனா உன் நண்பன் இங்கயே உயிரை விட்டுடுவான்” என்று கத்தினான். அவன் பின்னால் தரையில் விழுந்து கிடந்த விக்கி, “வேண்டாம் விஜய்.. கதவத் திறக்காத.. எல்லா பயணிகளும் ஷட்டில்ல ஏறிட்டாங்க. நீயும் தப்பிச்சு போய்டு. என்னைப் பத்திக் கவலைப்படாத” என்றான். அவன் வயிற்றில் மீண்டும் ஓர் உதய் விழ, மயக்கமடைந்தான். இதையெல்லாம் காமிராவில் பார்த்த விஜய், ஒரு முடிவுக்கு வந்தான்.

ஷட்டிலைத் தொடர்புகொண்டு, ஷட்டில் ஆப்பரேட்டரிடம்( shuttle operator) அதை இயக்கி தப்பிக்குமாறு  கூறிவிட்டு, ஷட்டிலை எஜெக்ட்(eject) செய்தான். பின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொண்டு, ஷட்டிலில் பயணிகள் தப்பி வரும் விவரத்தைக் கூறிவிட்டு, திட்டமிட்டபடி, டிரோன்(drone) மூலம் அந்த விண்வெளி நிலையத்தை அழிக்குமாறும் கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வின்கலத்தைத் தாக்கிக் கைப்பற்றும் கமாண்டோக்கள் (boarding அண்ட் capturing commandos) வரும்வரை காத்திருக்கக் கூறினர்.

பின்பு, காப்ப்பரையின் ஒலிப்பெருக்கிகளை இயக்கி, “ரவி, அந்த ஷட்டில் தப்பிச்சுப் போயாச்சு. இனிமே நீ ஒன்னும் பண்ண முடியாது. காமன்டோஸ் வந்துட்டு இருக்காங்க. நீ தப்பிக்க வழியே இல்லை” என்றான்.

ரவி இதை எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தான். கோவத்தில் விக்கியை சுட்டுக்கொல்ல எத்தனித்தான்.. அப்போதுதான் அவனுக்கு அது நினைவுக்கு வந்தது.. காமிராவை நோக்கி, “இல்லை.. நான் தப்பிக்க முடியும். நான் வந்த ஷட்டில் (சிறையில் இருந்து கைதிகளை தப்புவித்த விண்கலம்) இருக்கு. நான் அதுல தப்பிக்க உதவி பண்ணினா உன் நண்பன் பிழைப்பான். நீ உதவலைனா , நான் எப்படியும் சாக வேண்டியதுதான்.அதனால உன் நண்பனையும் கொன்னுடுவேன்” என்றான்.

விஜய் குழப்பமடைந்தான். ரவியைத் தப்பிக்கச் செய்வது கொஞ்சம் ஆபத்தான காரியம்தான். ஆனால் அவனால் எப்படியும் அந்த விண்கலத்தில் ஏறி தப்பிச் செல்ல முடியாது. தரையிறங்கும் முன்னர் சுட்டு வீழ்த்தி விடுவார்கள். எனவே, அந்த ரிஸ்க்கை எடுக்கலாம் என முடிவு செய்தான். ஆனால் ரவியின் மனதிலிருந்த திட்டங்களை விஜய் அறிந்திருக்கவில்லை..
10

மகேந்திரகிரியில் உள்ள தேசிய விண்வெளி பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம், வழக்கத்தை மீறி இன்னும் அதிகப் பரபரப்பாகக் காணப்பட்டது. அனைவரும் எதோ உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்போல உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டனர். காரணம், “மிதக்கும் சொர்க்கத்தில்” இருந்த பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக விண்கலம் ஏறி திரும்ப வருகின்றனர் என்று விஜய் அனுப்பிய செய்தி. எல்லோரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருந்தாலும், ஒருவர் மட்டும் அந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளாமல் தீவிர சிந்தனையில் இருந்தார். அவர் தலைமை ஆணையர் அநிருத்தன். எதோ ஓர் முடிவுக்கு வந்தவராக,  தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அருள்மொழியை தன் அறைக்கு வருமாறு தகவல் அனுப்பினார்.

“வணக்கம் சார்..” என்று சொல்லியவாறே உள்ளே நுழைந்தார் அருள்மொழி. அனிருத்தனின் முகவாட்டத்தைக் கவனித்தவர், “என்ன சார், மறுபடியும் ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டார்.

“இந்தப் பிரச்சனையே இன்னும் முடியலை அருள்மொழி.. ஆதாரமில்லாத அந்தத் தகவலை நம்ப  முடியாது. இதுவும் அந்தத் தீவிரவாதிகளோட சதியா இருக்கலாம்”

“நானும் அதை நம்பலை சார்.. தரையிறங்கற விண்கலத்தை மட்டக்களப்பில் உள்ள இராணுவ தளத்தில் இறக்கனும்னு உத்தரவு அனுப்பியாச்சு.. மட்டக்களப்பில் கமாண்டோக்கள் தயாரா இருக்காங்க.. விமானப் படையும் தயாரா இருக்கு.. திட்டமிட்ட பாதையில் இருந்து விண்கலம் மாறி, வேற திசைல போச்சுன்னா, அதைத் தாக்கவும் உத்தரவு கொடுத்திருக்கேன்..”

“நல்லது அருள்மொழி.. பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம் பக்காவா பண்ணி இருக்கிங்க.. ஆனா, டிரோன்ஸயும் தயாரா வெச்சிக்கோங்க.. எந்த நேரத்திலும் அதை செலுத்தத் தயார்பண்ணி வையுங்க..”

“சரி சார்”

“தாக்கிக் கைப்பற்றும் கமாண்டோ படை என்ன ஆச்சு?”

“10 நிமிடத்துக்கு முன்னாலத்தான் அவங்க விண்கலம் புறப்பட்டு இருக்கு.. இன்னும் 20 நிமிஷத்துல மிதக்கும் சொர்க்கத்த அடைஞ்சுடுவாங்க சார்..”

“நல்லது அருள்மொழி.. கவனமா இருங்க.. முடிஞ்சவரை அந்தத் தீவிரவாதிகளை உயிரோட பிடிக்க முயற்சி பண்ணனும்..”

“சரி சார்”

இவர்கள் இப்படித் திட்டம் போட்டுக்கொண்டு இருக்க, அங்கே ரவியின் திட்டங்களோ கொடூரமானதாக இருந்தது.

கட்டுப்பாட்டு அறையினுள் கையும் காலும் கட்டப்பட்டு தரையில் மயங்கிக் கிடந்தான் விக்கி..

“உன்னால தப்பிக்க முடியாது.. அந்த விண்கலதில் போய் நீ தரையிரங்கறதுக்குள்ள அதை தாக்கி அழிச்சுடுவாங்க.. பேசாம சரணடைஞ்சுடு” என்றான் விஜய்.

“கண்டிப்பா அவங்களால நான் போற விண்கலத்தத் தாக்க முடியாது. ஏன்னா நான் விண்கலத்த என் நாட்டுல தரையிறக்கப் போறேன்.. அதையும் மீறி அவங்க என் நாட்டு வான் எல்லைல நுழைஞ்சு தாக்குனா அதையே காரணமா வெச்சு உங்க நாட்டு மேல பொருளாதாரத் தடை கொண்டு வந்துடுவாங்க.. எப்படி ஆனாலும் எனக்கு சந்தோசம் தான்..” என்றான் ரவி.

ரவி சொல்வதும் ஒருவகையில் உண்மைதான்.. அவன் எதிரி நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் பிறகு எதுவும் செய்ய முடியாது.. விண்கலத்தை அழிப்பதாக இருந்தால் உயர் காற்று மண்டலத்திலேயே (Upper Atmosphere) அழித்தால்தான் உண்டு.. அதற்கு விஜயும் மனதுள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டான்.

“என்ன? எங்க நாட்டு எல்லைக்குள்ள நுழைஞ்சாதான.. அதுக்குள்ளே தகவல் சொல்லி என்னை போட்டுதள்ளிடலாம்னு யோசிக்கிறியா?” என்றான் ரவி.. விஜய்க்கு இதயமே நின்றுபோனது.. இந்த பாதகன் மனதுள் நினைத்ததை அப்படியே சொல்கிறானே என்று நினைத்துக்கொண்டே, இல்லை என்று தலையை ஆட்டினான்.

“நீ அப்பட்டித்தான் யோசிப்பன்னு எனக்குத் தெரியும்.. அதுக்கும் என்கிட்ட ஒரு ஏற்பாடு இருக்கு. இதோ இவன என்னோட அழைச்சுட்டு போறேன்.. ஷட்டில் கிளம்பத் தேவையான கட்டளைகளை கணினிக்கு கோடு. நான் பத்திரமா போய்ச் சேர்ந்ததும் இவன பத்திரமா திருப்பி அனுப்புறேன்” என்று விக்கியைக் கைகாட்டினான் ரவி.

விஜய்க்கு உலகமே காலடியில் நொறுங்கியதுபோல் இருந்தது. தான் உயிருடன் இருக்கும்போது விக்கியை அவனால் பலிகொடுக்க முடியாது.

“நீ என்ன அரிச்சந்திரனா? நீ கண்டிப்பா அவனத் திருப்பி அனுப்ப மாட்ட. உன்ன நம்ப முடியாது” என்றான் விஜய்.

“என்ன நம்பறதத் தவிர உனக்கு வேற வழி இல்லை”

“வேற வழி இருக்கு. நீ கிளம்பின பிறகு நான் எங்க நாட்டுக்கு தகவல் கொடுத்துடுவேன்னு தான விக்கிய கூட்டிட்டு போறேன்னு சொல்ற.. விக்கி வேண்டாம். நானே உன்கூட வர்றேன்”

“நீ என்கூட வந்துட்டா அப்புறம் ஷட்டில யார் எஜெக்ட் பண்ணுவா?”

“டைம் படி எல்லாம் தான நடக்கிற மாதிரி செட்டப் பண்ணிடுறேன்.. விக்கி இப்படியே இருக்கட்டும். கமாண்டோஸ் வந்து அவன விடுவிச்சுக்குவாங்க. அதுக்குள்ளே நம்ம உன் நாட்டு வான் எல்லைக்குள்ள போய்டலாம்.”

ரவிக்கு விஜய் சொல்வது சரி என்றுதான் பட்டது. விஜயை இங்கு விட்டால் அவன் விக்கி இறந்தாலும் பரவாயில்லை என்று தகவல் சொல்லிவிடுவானோ என்று அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்வதுதான் சரி என்று நினைத்தான். இருந்தாலும் இதில் ஏதும் சதி இருக்குமோ என சந்தேகப்பட்டான். மயக்கம் தெளிந்தாலும் விக்கியால் இயங்க முடியாதபடிக்கு கட்டப்பட்டிருக்கிறான். எனவே அவன் பிரச்சனை இல்லை.. எதாவது செய்வதானால் விஜய்தான் செய்ய முடியும். எனவே விஜயை அழைத்துசெல்லத் தீர்மானித்தான்.

“சரி.. நீ என்கூட வா.. ஷட்டில் எஜெக்ட் பண்ண வேண்டிய கமாண்ட்ஸ் எல்லாம் கொடு” என்றான் ரவி.

விஜய் வேகமாக இயங்க ஆரம்பித்தான்.. விசைப்பலகையில் புயலென இயங்கி விண்கலம் கிளம்பத் தேவையான கட்டளைகளைக் கொடுத்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு, “ஷட்டிலில் போய் ஆட்டோமேடிக் எஜெக்சன் மோடை ஆன் பண்ணினாத் தான் நான் இங்க டைமர செட் பண்ண முடியும். நான் போய் அத ஆன் பண்ணிட்டு வரேன். இரு” என்றான் விஜய். ரவியும் ஷட்டிலை இயக்கும் பயிற்சி பெற்றவன்தான் என்பதால் இது உண்மைதான் என அவனுக்குத் தெரியும். எனவே, “வேண்டாம். நானே போய் ஆன் பண்ணிட்டு வரேன். நீ மற்ற வேலைகளை பாரு” என்று சொல்லிவிட்டு ஷட்டிலை நோக்கிச் சென்றான் ரவி.

அவன் கண்களை விட்டு மறந்ததும் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பின்வரும் செய்தியை தட்டச்சு செய்தான்:

தலைமை விண்வெளி பாதுகாப்பு அதிகாரிக்கு,
தீவிரவாதக் கூட்டத்தின் தலைவன் ரவி, விண்வெளி சிறையில் இருந்து தப்பப் பயன்படுத்திய விண்கலத்தில் தப்பி அவன் நாட்டுக்குள் சென்றுவிட திட்டமிட்டுள்ளான்.. அவன் அந்நாட்டு வான் எல்லைக்குள் நுழையும் முன் வின்கலத்தைத் தாக்கி அழிக்கவும்

விஜய்

கடிதத்தை மீண்டும் வாசித்து சரிபார்த்துவிட்டு அனுப்பினான். மின்னஞ்சல் அனுப்பப்பட்டதை உறுதி செய்துகொண்டு, அது அனுப்பப்பட்டதற்கான பதிவை அழித்து, அஞ்சல் பெட்டியை மூடினான். பின்பு மயங்கியிருந்த விக்கியின் அருகில் சென்று அமர்ந்து, “இங்க இருந்து கிளம்பறதுக்குள்ள எப்படியாவது சொல்லனும்னு இருந்தேன். இப்ப சொல்லிடுறேன்.. விக்கி.. ஐ லவ் யூ டா..” என்று சொல்லி, அவன் நெற்றியில் முத்தமிட்டான்.. பின்பு, தன் கண்களின் ஓரத்தில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ஷட்டில் செலுத்தப்பட வேண்டிய வேலைகளை கவனித்தான். எல்லாம் முடியவும், ரவி திரும்ப வரவும் சரியாக இருந்தது. இருவரும் ஷட்டிலை நோக்கச் சென்றனர்.
அது ஒரு சிறிய ரக விண்கலம். எனவே அதை இயக்க ஒரே ஒரு ஷட்டில் ஆபரேட்டர் போதுமானது. காக்பிட்டில் (cockpit) ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருக்கும். சிறைக்குக் கைதிகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டுசெல்ல வடிவமைக்கப்பட்டது என்பதால், ஷட்டிலில் இருக்கும் கைதிகள் ஆப்பரேட்டரைத் தாக்கி ஷட்டிலைக் கைப்பற்றாமல் இருக்க, இரண்டு பகுதிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனியான வெளி வாயில்களுடன் இருக்கும். அதன் பயணிகள் வாயில் வழியாக விஜயை உள்ளே அனுப்பி பூட்டிவிட்டு, முன்பிருந்த ஆபரேட்டருக்கான வாயில் வழியாக ரவி உள்ளே நுழைந்தான். பயணிகள் வாயில், வெளிப்புறத்தில் இருந்தோ, அல்லது ஆபரேட்டர் கட்டளையின் மூலமோ மட்டும்தான் திறக்கும். உள்புறத்தில் இருந்து திறக்க முடியாது. கைதிகளை கொண்டுசெல்வதால் இப்படி ஒரு பாதுகாப்பு அம்சம் அதில் இருந்தது. எனவே, ரவி தைரியமாக இருந்தான்.

ஷட்டில் எஜெக்ட் செய்யப்படுவதற்கான கவுண்ட்-டவுனை துவக்கினான் ரவி. இன்னும் 5 நிமிடத்தில் புறப்படும் என்று கணினித் திரை காட்டியது. 4 நிமிடம்.... 3 நிமிடம்....2 நிமிடம்....1 நிமிடம்.... என நேரம் ஓடியது.. இன்னும் 40 வினாடிகள் என்று திரையில் ஓடிக்கொண்டிருந்த போது, அதை மிக ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்த ரவி, திரையின் ஓரத்தில், பயணிகள் வாயில் திறப்பதைக் குறிக்கும் குறியீடு ஒளிர்வதை கவனிக்கவில்லை..

பின்புறம், பயணிகள் வாயில் திறப்பதைப் பார்த்த விஜய், மிகவும் குழப்பமடைந்தான். எதோ பிரச்சனையாக இருக்கும் என நினைத்து வெளியே வந்தான். அவன் வெளியேறவும் மீண்டும் அந்தக் கதவு மூடிக்கொண்டது. அடுத்த 10 வினாடிகளில் விண்கலம் எஜெக்ட் ஆனது. அது எப்படி நடந்தது? நமக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் பின்னே சென்று பார்ப்போம்..

விஜயும் ரவியும் கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியரவும், மித்ரா விக்கியை மயக்கத்திலிருந்து எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டது. ஷட்டிலை திறக்க முன்பு விஜய் மித்ராவை விக்கியிடம் தந்தது நினைவிருக்கலாம். மித்ரா திருடப்பட்டால், அதை அணிபவனை செயலிழக்கச் செய்ய, ஒரு மின்னதிர்ச்சி தரும் அமைப்பு இருந்தது. இப்போது விக்கியை செயல்பாட்டுக்குக் கொண்டுவர, அந்த மின்னதிர்ச்சியை சிறிய அளவில் மித்ரா பயன்படுத்தியது. விக்கி பதறி எழுந்தான். மித்ரா நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறியது.

விக்கி கட்டுகளை அவிழ்த்துகொள்ள முன்றான்.. முடியவில்லை.அவன் கட்டுகளை விடுவிப்பதற்குள் ஷட்டில் புறப்பட்டுவிடும் போல இருந்தது.

“ஷட்டில புறப்படாம நிறுத்து மித்ரா” என்றான் விக்கி.

“என்னால முடியல.. என்னால தடுக்க முடியாதபடிக்கு விஜய் அதை லாக் பண்ணியிருக்கான்”

“நான் அந்த ரவிகிட்ட பேசணும்.. அதாச்சும் முடியுமா?”

“இல்லை. அதுவும் முடியாது”

விக்கி யோசித்தான்.. எதுவும் புலப்படவில்லை.. “இப்ப அவன எப்படி வெளிய கொண்டுவர?”

“கதவைத் திறந்துதான்”

“ஜோக் அடிக்க இதுவா நேரம் மித்ரா?” என்று கோபித்தவன், உடனே பிரகாசமானான்.. “கரெக்ட்.. கதவைத் திறக்கனும். மித்ரா, அந்த ஷட்டில் டோர..” என்று விக்கி முடிப்பதற்குள், “திறந்துட்டேன்” என்றது மித்ரா. விஜய் கதவைத் தண்டி வெளியேறியதை காமிராவில் பார்த்ததும் மீண்டும் கதவை மூடியது. இது எதுவும் தெரியாத ரவி, எஜெக்ட் ஆனதும் விண்கலத்தை கிளப்பிக்கொண்டு ‘போய்ச்சேர்ந்தான்’. அவன் நிலை என்ன ஆகி இருக்கும் என்பதை வாசகர் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். அதுபோக, பிற்பாடு நம் நாயகர்களால் துவக்கத்தில் அடைத்துவைக்கப்பட்ட உதய், கமாண்டோக்களால் கைதுசெய்யப்பட்டு, சர்வதேசே நீதிமன்றத்தில் ஆஜராகி, அவன் நாட்டு உளவுத்துறைக்கும் இந்த தாக்குதலுக்கும் இருந்த தொடர்பை ஒப்புக்கொள்ள, அந்த நாட்டின் மீது பொருளாதார, தொழில்நுட்ப தடைகள் கொண்டுவரப்பட்டது தனிக்கதை. இப்போது நாம் ஷட்டிலில் இருந்து வெளியே வந்த விஜய் என்ன செய்தான் என்பதைக் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம்..

விஜய் ஓடிச்சென்று விக்கியின் கட்டுகளை விடுவித்தான். கட்டுகள் விடுபட்டதும் விஜயின் கன்னம் பழுக்க ஓர் அறை விட்டான் விக்கி..

“ஏன்டா இப்படி பண்ணின? எண்ணக் காப்பாத்த முயற்சி பண்ணாத.. தப்பிச்சு போய்டுன்னு சொன்னேன் இல்லை.. அந்த தீவிரவாதி தப்பி அவன் நாட்டுக்கு போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?” என்றான் விக்கி. விஜய் பேசவில்லை. தலைகுனிந்து மௌனமாயிருந்தான். விக்கி அவனை நெருங்கி வந்தான். அவன் தாடையை விரல்களால் உயர்த்தி, அவன் கண்களைப் பார்த்தான்..

“நான் மயங்கியிருந்தப்ப என்கிட்ட எதோ சொன்னியாமே.. மித்ரா சொல்லுச்சு”

“அது வந்து....”

“அத நீ சொல்ல மாட்டியான்னு தான் நான் இத்தன நாளா காத்துட்டு இருக்கேன்.. என் கண்களைப் பார்த்து சொல்லு”

“விக்கி.. ஐ லவ் ....”

அந்த வார்த்தைகளை விஜய் முடிக்கும்வரை விக்கி காத்திருக்கவில்லை.. அதற்குள் அவன் இதழ்களை தன் இதழ்களால் மூடினான்..

--முற்றும்--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Web Analytics