வியாழன், செப்டம்பர் 12, 2013

யுத்தம் - பாகம் 7

படமெடுத்து நின்ற பாம்பைக் கண்டதும் திவ்யாங்கன் உறைந்து நின்றான். அவன் பின்னே வந்துகொண்டிருந்த அமரகீர்த்தி, இதைக் கண்டதும் திவ்யாங்கனைப் பின்னால் இழுக்க, வேகமாக ஏதோ அசைவதைக் கண்ட பாம்பு, திவ்யாங்கனைச் சீண்டப் பாய்ந்தது. ஆனால், கணப்பொழுதில், திவ்யாங்கன் விலகிட, தீண்டப்படாமல் தப்பினான். பின், அமரகீர்த்தியின் தோள்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “அசையாதே, அமைதியாய் இரு” என்றான். ஓரிரு நிமிடங்களில் அந்தப் பாம்பு ஊர்ந்து மறைந்தது. அது மறைந்ததும், அமரகீர்த்தி பதற்றத்துடன், “திவ்யாங்கா! உனக்கு ஒன்றும் இல்லையே.. அந்தப் பாம்பு ஏதும் தீண்டிவிட்டதா?” என்று கேட்டான். கேட்டவன், அவன் பதிலுக்குக் காத்திராமல், அவனைக் கீழே அமரச் செய்து, அவன் கால்களில் ஏதும் காயம் இருக்கிறதா என்று சோதித்தான்.

“அமரகீர்த்தி.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.. விடு” என்று திவ்யாங்கன் சொன்னதைக் கூட கேட்காமல், தானே பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “நல்லவேளை.. தீண்டிய காயம் ஏதும் இல்லை” என்றான் அமரகீர்த்தி.

“அதைத்தானே நானும் சொன்னேன்” என்றான் திவ்யாங்கன்.

“இதென்ன? இப்படிப் பாம்பு எல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறதே? இதையும் கருவூலத்தில் வைத்துப் பாதுக்காக்கிறீர்களா?”

“அந்தப் பாம்புதான் கருவூலத்தைப் பாதுக்காக்கிறது. அது திருடர்களை அச்சுறுத்துவதற்காக வளர்க்கப்படும் நஞ்சு நீக்கப்பட்ட பாம்பு”

“என்னமோ.. இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்”

“நீயும்தான் அதிகம் பதற்றப்படுகிறாய். நாடாளப்போகும் இளவரசர் ஒரு பாம்பைக் கண்டு இப்படியா அஞ்சுவது?”

“அப்படியில்லை.. ”

“சரி.. என்னை யாரோ ஒரு பெண் காதலிப்பதாகக் கூறினாயே.. யாரது?”

அமரகீர்த்தி அதிர்ச்சியடைந்தான்..

“நீ சொல்லாவிட்டாலும், உன் கண்கள் காதலை சொல்லிவிட்டன. அதுவும்போக, ஒரு இராஜாங்கத்தின் இளவரசன், என் கால்களைத் தொட்டு, பரிசோதித்துப் பார்த்தாயே.. அப்போதே புரிந்துகொண்டேன். சரி, சொல். யாரந்தப் பெண்?”

அமரகீர்த்தியை வெட்கம் ஒருபுறமும், பயம் ஒருபுறமும் முற்றுகையிட்டன.

“எதற்காக அந்தப் பெண்ணைப் பற்றி இவ்வளவு சிரத்தையாய்க் கேட்கிறாய்?” என்று மங்கிய குரலில் கேட்டான்.

“முதலில் நீ அவள் யாரென்று சொல். பிறகு காரணம் சொல்கிறேன்”

“இந்நாட்டு இளவரசியைத்தான் சொன்னேன். இப்போது சொல். ஏன் இவ்வளவு பிடிவாதமாய்க் கேட்கிறாய்?”

“அவளிடம் சென்று ‘நான் ஏற்கனவே ஒரு இளவரசனைக் காதலிக்கிறேன். அதனால் நீங்கள் என்னை மறந்துவிடுங்கள்’ என்று சொல்லத்தான்” என்று சொல்லி, ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றான் திவ்யாங்கன்.

இவர்கள் இருவரும் இங்கு காதல் வளர்த்துக்கொண்டிருக்க, இவர்கள் தந்தைமார் இருவரும் அந்தக் காதலுக்கு வினையை வளர்த்துக்கொண்டிருந்தனர்.

இரண்டு கம்பீரமான, அழகிய வேலைப்பாடுடைய ஆசனங்கள் எதிரெதிரே போடப்பட்டிருக்க, அவற்றின் மத்தியில் ஒரு சிறிய வட்ட வடிவ மேசையில் மலர்க்கொத்தும் பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆசனத்தில் விதுரசேனர் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே இருந்த மற்றொரு ஆசனத்தில் துர்காபுரியின் முதன்மை மந்திரி ஆதித்ய விக்ரமன் அமர்ந்திருந்தார். கொஞ்சம் பருத்த உடல், பகட்டான ஆடை ஆபரணங்கள், புன்னகை தவழும் அந்த முகத்தில் அறிவாற்றலும், தந்திரமும் மறைந்திருந்தன. இருவரும் ஏதோ ஒன்றை மிகத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“இளஞ்சாமை விலையேற்றம் குறித்த உங்கள் கவலை எனக்குப் புரிகிறது மந்திரியாரே.. ஆனால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் இருக்கும் சூழலில், விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. நாட்டின் ஒரு பாகத்தில் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டு தானிய உற்பத்தி குறைந்ததால் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று”

“தாங்கள் கூறுவது புரிகிறது வேந்தே.. ஆனால், ஒரேயடியாக இரண்டு மடங்கு விலை உயர்த்தப்படும்போது, அது துர்காபுரியினை வெகுவாக பாதிக்கும். சுபர்ணராஷ்டிரத்துடன் நீண்ட காலம் நட்பு நாடாக இருக்கும் எங்களுக்கு ஏற்றுமதி வரியில் விலக்கு அளித்தால் நன்றாயிருக்கும்”

“சுபர்ணராஷ்டிரம் அதன் எல்லா அண்டை நாடுகளுடனும் நல்ல நட்பையே விரும்புகிறது. நட்புறவைப் பேணி வருகிறது. இப்போது உங்களுக்கு மட்டும் வரிச்சலுகைகள் அளித்தால், மற்ற நாடுகளின் பகையை சம்பாதிக்க வேண்டி வரும். அவர்களும் வரிச்சலுகைகளை எதிர்பார்ப்பார்கள். அதுபோக, நாடு இருக்கும் பொருளாதாரச் சூழலில், இவ்வாறு வரிவிலக்கு அளிப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும். நட்பு நாடு என்ற அடிப்படையில் மட்டும் உங்களுக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்க முடியாது அல்லவா? அதற்கு ஏதேனும் விசேஷித்த உறவு இருக்க வேண்டும்”

“விசேஷித்த உறவு என்று வேந்தர் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? எனக்குப் புரியவில்லையே?”

“ஒரு திருமண பந்தம். உங்கள் இளவரசியை எங்கள் மருமகளாக ஆக்கிக்கொண்டால், இரண்டு நாடுகளின் பந்தம் இன்னும் உறுதியாகும். இரண்டு நாடுகளும் இணையும்போது எல்லாப் பிரச்சினைகளும் தீருமல்லவா?”

மகா மந்திரியாரின் முகம் ஒரு கணம் சுருங்கியது. ஒரு மிகச்சிறிய கணம். மீண்டும் அதில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “அதைப்பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லையே வேந்தே” என்றார்.

“துர்காபுரி மன்னரின் மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை நீங்கள்தானே ஏற்று நடத்துகிறீர்கள்? எல்லா அரச அதிகாரங்களும் உங்கள் வசம் தானே இருக்கிறது மந்திரியாரே? உங்களுக்கு இல்லாத அதிகாரமா?”

“ஆனால் ஒரு பெண் இன்னாரைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் காலஞ்சென்ற வேந்தருக்குக்கூட இல்லை அரசே. இதுகுறித்து இளவரசியாரும் மகாராணியும்தான் முடிவெடுக்க வேண்டும்”

“அதுவும் சரிதான் மந்திரியாரே. அப்படியானால் நேரடியாக நானே அவர்களிடம் இதுகுறித்துப் பேசுகிறேன்”

“நல்லது வேந்தே.. தாங்கள் இதுகுறித்து மகாராணியாரைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறேன். இப்போது தாங்கள் விடைகொடுத்தால், நான் கிளம்புகிறேன்”

வரும்பொழுது பால்வடிந்த மகா மந்திரி ஆதித்ய விக்ரமரின் முகம் வெளியேறும்போது நஞ்சைக் கக்கிக்கொண்டிருந்தது. அந்த நஞ்சு காவு வாங்கப் போகும் உயிர்கள் எத்தனை என்பதைக் காலம்தான் அறியும்.

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Web Analytics